கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் தனியாக வீட்டில் இருந்த மூதாட்டியை கொலை செய்த வாலிபரும் அவரது சகோதரரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் 78 வயதான சின்னம்மாள். இவரது கணவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், சின்னமாளின் 3 மகள்கள் திருமணம் ஆகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள். சின்னம்மா தனியாக தனது வீட்டில் வசித்து வருவதோடு, அரிசி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் அவரது வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அப்பகுதி மக்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது சின்னம்மாவின் கை மற்றும் முடி தீயால் எரிக்கப்பட்டும், உடலில் ரத்த காயங்களுடனும் சடலமாக காணப்பட்டார்.
அவரது கழுத்தில் அணிந்திருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் பீரோவில் இருந்த சுமார் 20 சவரன் நகைகள் திருட்டு போயிருந்தன. சம்பவத்தை அறிந்த கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு கொலையில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது தலைக்கவசம் அணிந்த ஒருவர் சின்னம்மாள் வீட்டிற்குள் சென்று விட்டு சில நிமிடங்களுக்கு பின்பு திரும்பி வரும் காட்சி பதிவாகி இருந்தது. மேலும் அப்பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், மோட்டார் சைக்கிளில் தனியாக வந்த மற்றொரு நபர் வாகனத்தை ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு தலையில் ஹெல்மெட் அணிந்து மூதாட்டி வீட்டுக்கு சென்றது பதிவாகி இருந்தது.
மேலும் அந்த நபரை போலீசார் அடையாளம் கண்டனர். அவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான வேல்ராஜ் என்ற விக்னேஷ் என்பதும் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் தற்போது வசித்து வருவதும் தெரியவந்தது. வேல்ராஜ் சின்னம்மாளின் வீட்டருகே உள்ள மாட்டுப் பண்ணையில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது சின்னாம்மாளுடன் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து அவருக்கு பொருட்கள் வாங்கித் தருவது உள்ளிட்ட உதவியும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மாட்டுப் பண்ணை மூடப்பட்டதால் கட்டிட வேலைக்கு வேல்ராஜ் சென்று வந்துள்ளார். இதற்கிடையே சின்னம்மாளிடமும் வேலை கேட்டுள்ளார். ஆனால் வேலை எதுவும் இல்லை என சின்னம்மாள் கூறிய நிலையில், அவர் அணிந்திருந்த நகையை கொள்ளை அடிக்க முடிவு செய்து வேல்ராஜ் சின்னம்மாள் வீட்டிற்கு சென்று பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க மறுத்ததால் வேல்ராஜ் சின்னம்மாளின் முகத்தில் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த அவர் மயங்கி விழுந்துள்ளார். இனி அவரை உயிரோடு விட்டால் தன்னை காட்டிக் கொடுத்து விடுவார் என்பதால் தீர்த்து கட்டுவதுடன் தடயங்களையும் அழிக்க வேண்டும் என வேல்ராஜ் முடிவு செய்து அவரை அடித்து கொலை செய்துள்ளார். கேஸ் அடுப்பை பற்றவைத்து சின்னம்மாளின் கை மற்றும் தலை முடியை எரித்துள்ளார். பின்பு அவரது நகைகளை கொள்ளையடித்து பின் அங்கிருந்து தப்பி ஓடினார்,மேலும் தடயங்களை அழித்தால், தான் சிக்க மாட்டோம் என்று நினைத்த வேல்ராஜ் தனது சகோதரர் அரவிந்தை விருதுநகரில் இருந்து வரவழைத்து நகைகளுடன் சகோதரரின் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல வேல்ராஜ் முடிவு செய்தார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் சொந்த ஊர் புறப்படும் முன்பு வேல்ராஜும் அவரது சகோதரர் அரவிந்தும் மது அருந்திக் கொண்டிருந்த போது தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தனியாக வீட்டில் இருந்த மூதாட்டியை நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்து சில மணி நேரங்களில் போலீசாரின் துரித நடவடிக்கையால் கொலை தொடர்பாக இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கொலையில் ஈடுபட்டவர்களையும் அடையாளம் காண்பதற்கு சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் முக்கிய தடயங்களாக மாறியுள்ளன. மேலும் போலீசார் அவர்கள் திருடிய 40 பவுன் நகைகளை மீட்டுள்ளனர். மேலும் மருத்துவ சோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் கொலை செய்துவிட்டு கொலையாளி வேல்ராஜ் அப்பகுதியில் சுற்றித்திரிந்து போலீசாரின் விசாரணை எந்த கோணத்தில் இருக்கும் என நோட்டமிட்டதாகவும் வேல்ராஜை அப்பகுதியில் பார்த்த சில நபர்கள் தெரிவித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்