க்ரைம்

"தண்டவாளத்தில் ஆடையின்றி பெண் சடலம்" - உடலில் இருந்த மர்ம காயங்கள்! அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்

பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே உயிரிழப்புக்கான காரணம்..

Muthu Lakshmi

அரியலூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆடையின்றி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் யார் என்பது இதுவரை தெரியாத நிலையில், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் ரயில் நிலையம் மற்றும் வஞ்சத்து ஓடைக்கு இடைப்பட்ட தண்டவாளப் பகுதியில் இன்று காலை பொதுமக்கள் வழக்கம்போல் சென்றுகொண்டிருந்தனர். அப்போது தண்டவாளத்தின் அருகே பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விருத்தாச்சலம் சரக ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் தலை, கை மற்றும் கால்கள் கடுமையாக சிதைந்திருந்தது தெரியவந்தது. மேலும், அவரது உடலில் எந்த ஆடையும் இல்லாதது போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெளிவான தகவல் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெண்ணின் ஆடைகள் அல்லது வேறு ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா என்பதை அறிய ரயில்வே போலீசார் நீண்ட தூரம் வரை தீவிர சோதனை நடத்தினர். இருப்பினும், இதுவரை எந்த ஆடையோ அல்லது முக்கிய தடயமோ கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், அந்த பெண் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு, சம்பவத்தை விபத்து போல காட்டுவதற்காக அவரது உடல் தண்டவாளத்தில் வீசப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், உயிரிழந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவரா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தை கண்டறிய அருகிலுள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட காணாமல் போனோர் புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன், சுற்றுப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன. ஆடையின்றி பெண் சடலம் மீட்கப்பட்ட இந்த சம்பவம் அரியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உண்மையான காரணம் குறித்து ரயில்வே போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.