க்ரைம்

“கால்வாயில் நிர்வாணமாக கிடந்த ஆண் சடலம்” - கணவரின் நண்பனுடன் கள்ளக்காதல்.. கோடரியால் வெட்டிக் கொன்ற மனைவி!

சடலத்தை அடையாளம் காண முடியாத வகையில் மாற்ற திட்டமிட்டதாகவும்,

Muthu Lakshmi

பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தில், மனைவியின் திருமணத்திற்கு மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறப்படும் கணவரை கொலை செய்து, அடையாளத்தை மறைக்கும் நோக்கில் அவரது நிர்வாண உடலை கால்வாயில் வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட மனைவியும், அவரது காதலரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் வெளியிட்ட தகவலின்படி, கொலைசெய்யபட்ட வீரேந்திர சிங், தனது மகன் மற்றும் இரண்டு மகள்களுடன் குடும்பமாக வசித்து வந்துள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் குமார் சிங் என்பவருடன் இவருக்கு நட்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நட்பின் காரணமாக அரவிந்த் அடிக்கடி வீரேந்திராவின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில், வீரேந்திராவின் மனைவி மம்தா தேவி மற்றும் அரவிந்த் குமார் சிங் ஆகியோருக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த உறவுக்கு பெண்ணின் கணவர் வீரேந்திர சிங் தடையாக இருந்ததாக கருதிய இருவரும், அவரைக் கொலை செய்ய திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜூலை 19-ஆம் தேதி இரவு, வீரேந்திர சிங் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மம்தா தேவி மற்றும் அவரது கள்ளகாதலன் அரவிந்த் குமார் சிங் இணைந்து கூர்மையான வெட்டும் கருவியால் தாக்கி கொலை செய்ததாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். கொலைக்குப் பிறகு, சடலத்தை அடையாளம் காண முடியாத வகையில் மாற்ற திட்டமிட்டதாகவும், வீரேந்திராவின் உடையில் இருந்த ஆடைகள் அனைத்தையும் அகற்றி, நிர்வாண நிலையில் அவரது உடலை பெரிய கால்வாயில் வீசியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கால்வாயில் உடல் அடித்துச் செல்லப்பட்டால் அடையாளம் தெரியாமல் போய்விடும் என அவர்கள் கருதியதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால், கால்வாயில் மிதந்து வந்த உடல் ரோத்தாஸ் மாவட்டத்திலிருந்து பக்ஸார் மாவட்டத்தின் டும்ராவோன் அருகே உள்ள கல்மான்பூர் கிராமத்தை வந்தடைந்தது. கால்வாயில் நிர்வாண சடலம் மிதப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அடையாள உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் மூலம், உயிரிழந்தவர் கரகாட்டா கிராமத்தைச் சேர்ந்த வீரேந்திர சிங் என்பது தெரியவந்தது. அவரது குடும்பத்தினரும் உடலை அடையாளம் காட்டினர். இதையடுத்து, வீரேந்திர சிங்கின் சகோதரர் ஜிதேந்திர சிங் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. டிஜிட்டல் ஆதாரங்கள், செல்போன் இருப்பிடத் தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆய்வு செய்த போலீசார், மம்தா தேவி மற்றும் அரவிந்த் குமார் சிங் ஆகியோரை கைது செய்தனர்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, விசாரணையின்போது இருவரும் தங்களது உறவின் காரணமாகவே இந்தக் கொலை நடைபெற்றதாக ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களும் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு குறித்து பக்ஸார் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.