இலங்கை கடற்படையினர் இன்று (செப்டெம்பர் 23, 2022) காலை நொரோச்சோலை இலந்தடிய பகுதியில் மேற்கொண்ட விசேஷ தேடுதல் நடவடிக்கையின் போது 155 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம் 2 கார்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடல் வழித்தடங்களில் பல்வேறு வகையான கடத்தல் முயற்சிகள் மற்றும் பிற வகையான சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதைத் தடுக்கும் நோக்கில், கடற்படையினர் தீவின் கரையோரப் பகுதிகளில் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
இந்த முயற்சிகளின் விரிவாக்கமாக, இலந்தடிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சோதனையிட்டதன் பின்னர், வாகனத்தில் இருந்து 155 கிலோ 450 கிராம் எடையுள்ள 78 பொதிகளில் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த இடத்தில் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மற்றொரு கார் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்களுடன் 02 சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் பிடிபட்ட கேரள கஞ்சா மூட்டையின்மதிப்பு ரூ. 46 மில்லியன். இதேவேளை, சந்தேக நபர்கள் 35 மற்றும் 40 வயதுடைய ராகம பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் கேரள கஞ்சா மற்றும் வாகனங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நொரோச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.