க்ரைம்

“என்னையும் எங்க அப்பாவையும் ஒண்ணா அடக்கம் பண்ணுங்க” - தந்தை கொலையால் மகள் விபரீதம்… இரு உயிரிழப்பிற்கு காரணம் உறவினர்களா?

தனது உறவினர் தான் இந்த கொலைக்கு காரணம் என்றும், தனது அப்பாவை கொன்றவர்களை...

Mahalakshmi Somasundaram

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள வடக்கு நெல்லையப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவர் கடந்த (மார்ச் 17) ஆம் தேதி தோட்டத்திற்கு செல்லும் வழியில் மர்ம கும்பல் இரும்பு ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பல கிலோ மீட்டர் சுற்றளவில் வயல்களும் வயல் சார்ந்த இடங்களும் மட்டுமே உள்ளதால் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லை. மேலும் சம்பவ இடத்தில் குறிப்பிட தகுந்த தடயங்கள் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இது ஒரு பிளைன்ட் கேஸ் என்பதால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் 14 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆறுமுகத்தின் மகள் பேபி கனி நெல்லை தியாகராய நகரில் உள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். தந்தை கொலையான நாளில் இருந்து வேலைக்கு செல்லாமல் பெரும் சோகத்தில் காணப்பட்ட அவர், நேற்று முன்தினம் காலை அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு கனியை பரிசோதித்த மாணவர்கள் அவரை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டதில் கனி தனது கையில் “நான் தாளில் எழுதி வைத்திருப்பதை நிறைவேற்றி என்னையும் எங்க அப்பாவையும் ஒண்ணா அடக்கம் பண்ணிடுங்க” என கையில் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் அவர் எழுதிய தற்கொலை கடிதத்தையும் போலீசார் கைப்பற்றிய நிலையில் அதில் “தனது உறவினர் தான் இந்த கொலைக்கு காரணம் என்றும், தனது அப்பாவை கொன்றவர்களை விரைவாக கைது செய்ய வேண்டும் என்றும், தந்தையின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாததால் அவரிடமே செல்கிறேன்” எனவும் உருக்கமாக எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தந்தை இறந்த 6வது நாள் காலையில் செவிலியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பேபி கனியின் உறவினர்கள் நேற்று மதியம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் முன்பு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வடக்கு நெல்லையப்பபுரம் கிராமத்திலும் மருத்துவமனை வளாகத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து இந்த கொலை வழக்கை விசாரிக்கும் போலீசார் நெல்லையப்ப புரம் பகுதியில் உள்ள கிணறுகளை எல்லாம் நேற்று காலை தீவிரமாக ஆய்வு செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஏதேனும் கிணற்றில் வீசப்பட்டுள்ளதா என போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் நாங்குநேரி உட்கோட்ட போலீசார் நெல்லையப்பபுரம் ஊரைச் சேர்ந்த 3 பேரை நேற்று சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். கொலை வழக்கு விசாரணை இன்னும் முழுமையாக நிறைவு பெறாததால், கைதானவர்கள் யார், பெயர் என்ன? உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டால் புலனாய்வு பாதிக்கப்படும் என போலீசார் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.