க்ரைம்

“ஒர்க் ஷாப் ஓனருக்கு அரிவாள் வெட்டு” - இரவில் காரை பழுது பார்க்க சொல்லி அடாவடி.. வெளியான அண்ணன் தம்பியின் பதைபதைக்கும் வீடியோ!

பாருக் தனது கடையை அடைத்து விட்டு கிளம்ப இருந்த நேரத்தில், சுத்தமல்லி சீனிவாச நகரைச் சேர்ந்த 40 வயதுடைய ஆனந்த் என்பவர் தனது காரை சரி செய்ய வருமாறு அழைத்துள்ளார்

Mahalakshmi Somasundaram

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே உள்ள ஹவுஸிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் 40 வயதுடைய முகமது அலி பாருக். இவர் சுத்தமல்லி விலக்கு பகுதியில் வாகன பழுதுபார்க்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். மேலும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பேட்டை பகுதி நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். நேற்று இரவு, பாருக் தனது கடையை அடைத்து விட்டு கிளம்ப இருந்த நேரத்தில், சுத்தமல்லி சீனிவாச நகரைச் சேர்ந்த 40 வயதுடைய ஆனந்த் என்பவர் தனது காரை சரி செய்ய வருமாறு அழைத்துள்ளார். அதற்கு பாருக், கடையை மூடிவிட்டதாலும் இரவு அதிக நேரம் ஆனதாலும் இப்போது வர முடியாது என மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த், பாருக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆனந்த் தனது தம்பியான பேட்டை ஆசிரியர் காலனியைச் சேர்ந்த 38 வயதுடைய ராஜகோபால் என்பவருடன் சேர்ந்து முகமது அலி பாருக்கை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பாருக்கின் தலை, கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.

ரத்த வெள்ளத்தில் சரிந்த பாருக்கின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஆனந்த் மற்றும் ராஜகோபால் ஆகியோர் அரிவாளுடன் கடைக்குள் பாருக்கைத் துரத்துவதும், அவர்களிடம் இருந்து தப்பிக்க பாருக் முயற்சிப்பதும் தெளிவாக பதிவாகியுள்ளது.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலுத்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி தாக்குதலில் காயமடைந்த பாருக்கிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார், ஆனந்த் மற்றும் ராஜகோபால் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

காரணமில்லாமல் கடை உரிமையாளரை அண்ணன் தம்பி அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.