திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சரவணம்பட்டியைச் சேர்ந்த 30 வயதுடைய துர்க்கைராஜ் என்ற இளங்கோ எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி 28 வயதுடைய சுலோச்சனா. இவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தம்பதியருக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கருது வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவர் மீது கோபமடைந்த சுலோச்சனா, கணவரை பிரிந்து தனது மகனுடன் புளியம்பட்டியில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்று தங்கி இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், குடும்பப் பிரச்சினையை பேசி முடித்து மீண்டும் மனைவியை அழைத்துச் செல்லும் நோக்கில் நேற்று துர்க்கைராஜ் புளியம்பட்டியில் உள்ள மனைவியின் தந்தை வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு தன்னுடன் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு கேட்ட நிலையில் சுலோச்சனா அதற்கு மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மீண்டும் கணவன்-மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, அப்போது இருவரையும் சமாதானப்படுத்துவதற்காக சுலோச்சனாவின் அண்ணனும், கட்டிடத் தொழிலாளியுமான 32 வயதுடைய பரத் தலையிட்டுள்ளார்.
ஆனால் சமாதானப் பேச்சு வார்த்தையின் போது துர்க்கை ராஜுக்கும் பரத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் மாறி தகாத வார்த்தைகளால் பேசிய நிலையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பரத் அருகில் கிடந்த கல்லை எடுத்து, மைத்துனர் என்றும் பாராமல் துர்க்கைராஜின் தலையில் போட்டு கொலை செய்திருக்கிறார். இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த துர்க்கைராஜ் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் மிதந்து தலை நசுங்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, பின்னர் உயிரிழந்த துர்க்கைராஜின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, கொலை சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் பரத்தை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சினையை தீர்த்து வைத்து மனைவியை அழைத்துச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட தகராறு, மைத்துனரின் உயிரைப் பறித்த சம்பவம் பழனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.