பெங்களூருவைச் சேர்ந்த நாகேந்திரா (30) என்பவரும், அறுவை சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வரும் 23 வயது இளம் பெண் ஒருவரும் கடந்த சில வருடங்களாக தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடு காரணமாக, அந்தப் பெண் நாகேந்திராவை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலன் நாகேந்திரா, அப்பெண்ணைப் பழிவாங்க கொடூரத் திட்டம் தீட்டியுள்ளார்.
நேற்று அந்தப் பெண் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு சென்ற நாகேந்திரா, அவரை மிரட்டி தனது காரில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளார். மகளைக் காணாததால் பதற்றமடைந்த பெண்ணின் பெற்றோர் உடனடியாக ஜெயநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காரில் கடத்திச் செல்லும் போதே, நாகேந்திரா அப்பெண்ணுக்கு கடுமையான கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் ஆயுதங்களையும் காட்டி மிரட்டி உள்ளார்.
"உன்னைக் கொலை செய்யாமல் விடமாட்டேன், காரில் ஏற்கனவே வெடிகுண்டு வைத்துள்ளேன்" என்று கூறி அவரை தாக்கியுள்ளார். கார் துமகூருவின் ஜோகிஹள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றி உள்ளது. இதில் நாகேந்திரா, மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். காரின் பின் இருக்கையில் நடந்த இந்த பயங்கர மோதலைக் கண்டு அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர், நிலைமையைக் கட்டுப்படுத்தக் காரை உடனடியாக சாலையோரம் நிறுத்தியுள்ளார். இந்தச் சாதகமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் பெண், காயங்களுடன் காரின் கதவைத் திறந்து கொண்டு வெளியில் குதித்து தப்பியோடியுள்ளார். கார் ஓட்டுனரும் நிலைமையை புரிந்து கொண்டு காரிலிருந்து கீழே குதித்து தப்பியுள்ளார். டிரைவர் காரில் இருந்து குதித்து சில நிமிடங்கள் கூட ஆகாத நிலையில், திடீரென நாகேந்திரா மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் பயங்கரமாக வெடித்து சிதறியது.
இந்த வெடி விபத்தில், காரின் உள்ளே இருந்த நாகேந்திரா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காதலியை அழிக்க நினைத்தவன், தான் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டாலேயே அழிந்த சம்பவம் பெங்களூரில் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரின் ஓட்டுநரும் பலத்த காயமடைந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்லம்பெல்லா பிரிவு போலீசார், காயமடைந்த ஓட்டுநரையும், காரில் இருந்து குதித்துக் காயமடைந்த பெண்ணையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நாகேந்திராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஓடும் காரில் வெடிகுண்டு வைத்து பெண்ணைக் கடத்த முயன்ற இந்த சம்பவம் கர்நாடகா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிந்து சென்ற முன்னாள் காதலியைக் பழிவாங்க ஓடும் காரில் வைத்துப் படுகொலை செய்யத் திட்டமிட்ட காதலன் வெடிகுண்டு வெடித்து உயிரிழந்த திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது. சமயோசிதமாக காரில் இருந்து குதித்ததால் அந்தப் பெண் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.