Pollachi College Student Theft 
க்ரைம்

“காதலனுக்காக திருடிய கல்லூரி மாணவி” - தந்தையின் நண்பர் வீட்டில் கைவரிசை… நகையை விற்று வாங்கப்பட்ட KTM பைக்!

பொள்ளாச்சியில் உள்ள நகைக்கடை ஒன்றில் சுமார் ரூ.2.50 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக தெரியவந்துள்ளது...

Mahalakshmi Somasundaram

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தந்தையின் நண்பர் வீட்டில் இருந்து 9 பவுன் தங்க நகைகளை திருடி, அதனை விற்று காதலனுக்கு இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்ததாக கூறப்படும் 19 வயது கல்லூரி மாணவி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம் சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த (ஆக 16) ஆம் தேதி மாணவி தனது தந்தையின் நண்பரான தமிழ்ச்செல்வன் என்பவரது வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அங்கிருந்த பீரோவை திறந்த மாணவி, அதில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகைகளை எடுத்துச் சென்றதாக தெரிகிறது. பின்னர் வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனதை அறிந்த தமிழ்ச்செல்வன், இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையின் போது, வீட்டில் இருந்தவர்கள் மற்றும் சம்பவம் தொடர்பான நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மாணவி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், மாணவி நகைகளை திருடிச் சென்றது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் விசாரணையில், மாணவி திருடிய 9 பவுன் தங்க நகைகளை பொள்ளாச்சியில் உள்ள நகைக்கடை ஒன்றில் சுமார் ரூ.2.50 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக தெரியவந்துள்ளது.

நகைகளை விற்று கிடைத்த பணத்தில், மக்கினாம்பட்டி பகுதியைச் சேர்ந்த தனது காதலனுக்கு இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்ததாக மாணவி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் திருடப்பட்ட நகைகள் மற்றும் அவற்றை விற்பனை செய்தது தொடர்பான விவரங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவியை போலீசார் பொள்ளாச்சி ஜே.எம். 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். காதலனுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்காக தந்தையின் நண்பர் வீட்டிலேயே கல்லூரி மாணவி நகைகளை திருடி விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்