ஹைதராபாத்தில் 23 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர், தனது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு DNA பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறிய கணவரால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று கணவரும் அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவரான சுஷ்மிதா, ஜூன் 25 ஆம் தேதி மாலையில் மேடக் மாவட்டம், அல்லாதுர்க் மண்டலம், கடிபெத்தபூர் கிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். “அவரது கணவர் அபிலாஷ் மற்றும் அவரது தாயார் லட்சுமி ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அனுப்பப்பட்டனர் என்று அல்லாதுர்க் உதவி ஆய்வாளர் டி. சங்கர் கூறினார்.
சுஷ்மிதா இறந்தபோது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். மேலும், காவல்துறையிடம் அளித்த புகாரில், அவரது கணவர் சுஷ்மிதாவை தொடர்ந்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகவும், பின்னர் பிறக்காத அந்த குழந்தைக்கு DNA பரிசோதனை கோரியது போன்ற சம்பவங்களால் தனது மகள் இந்த விபரீத முடிவை எடுத்ததாக சுஷ்மிதாவின் தாய் ஜனபாய் குற்றம் சாட்டியுள்ளார். விகாராபாத் மாவட்டத்தின் மோத்குபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுஷ்மிதா, காடிபெத்தாபூரைச் சேர்ந்த வளையல் விற்பனையாளரான அபிலாஷுக்குத் திருமணமாகி சுமார் 18 மாதங்கள் ஆகியுள்ளன. இதுகுறித்து சுஷ்மிதாவின் தாயார், "ஜூன் 23 அன்று, வளைகாப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்துப் பேசுவதற்காக நானும் என் கணவரும் சுஷ்மிதாவின் வீட்டிற்குச் சென்றோம். நாங்கள் அங்கு இருந்தபோது, அபிலாஷ் அந்த விழா குறித்து வாக்குவாதம் செய்து, பிறக்காத குழந்தைக்கு DNA பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரினார். அதைத் தொடர்ந்து, வீட்டு பெரியவர்கள் தலையிட்டதால் நாங்கள் மீண்டும் வீட்டிற்குத் திரும்பிவிட்டோம்," என்று ஜனபாய் தனது காவல் புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.
புகாரின்படி, இரு குடும்பத்தினர் முன்னிலையில் எழுப்பப்பட்ட அந்தக் கோரிக்கை, சுஷ்மிதாவுக்குக் கடுமையான அவமானத்தையும் மன அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட சந்தேகம் அவரது மனநிலையை ஆழமாகப் பாதித்ததாகக் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, உடல் சுஷ்மிதாவின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.