கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்துள்ள தக்கலே பகுதியை சேர்ந்தவர் 21 வயதுடைய மாணவி கண்மணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனது தாயுடன் கோவைக்கு ஒரு தனியார் பேருந்தில் சென்றிருக்கிறார். அப்போது அந்த பேருந்தின் ஓட்டுநராக இருந்த 36 வயதுடைய அனீஸ் மாணவி மற்றும் அவரது தாயுடன் பேசி பழகியுள்ளார். மேலும் அந்த பயணத்தின் போது அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.
ஓட்டுநரான அனீஸ்க்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கண்மணியின் தாயிடம் “உங்கள் மகளும் என ஒரு மகள் போல தான் என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்” என தெரிவித்துள்ளார். பின்னர் மாணவி வீட்டிற்கு வந்து மீண்டும் கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம் அனீஸ் ஓட்டுநராக உள்ள பேருந்தில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. அதுபோல கடந்த (நவ 09) கல்லூரி விடுமுறை காரணமாக வீட்டிற்கு வருவதற்கு அனீஸ் ஓட்டுநராக இருந்த பேருந்தில் கண்மணி பயணம் செய்திருக்கிறார்.
படுக்கை வசதியுள்ள அந்த பேருந்தில் மாணவி பயணம் செய்த போது பாதி வழியில் அனீஸ் மாணவிக்கு பிஸ்கட் கொடுத்திருக்கிறார். அதை உண்ட மாணவி மயங்கிய நிலையில் மாணவியை அனீஸ் பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் மாணவியிடம் “நம்ம ரெண்டு பேருக்கும் நைட்டே எல்லாம் முடிஞ்சது” என கூறியுள்ளார் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவிப்பதாக கூறிய நிலையில் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து வைத்திருந்த ஓட்டுநர் அதை காட்டி மாணவியை மிரட்டியுள்ளார்.
மேலும் இதையே காரணமாக வைத்து மாணவியை தனிமையில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்வதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் ஓட்டுநரின் கொடுமையை பொறுத்துக்கொள்ள முடியாத மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து காவல் நிலையத்திற்கு சென்ற பெற்றோர்கள் ஓட்டுநர் மீது புகாரளித்த நிலையில் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.