இந்தியா என்னதான் வளமான ஒரு நாடாகவும் உலக அளவில் வலிமையான ராணுவத்தை கொண்டிருந்தாலும், இந்தியாவின் மிகப்பெரிய இழுக்குகளில் ஒன்று சாதிய கொடுமை. ஒவ்வொரு நாட்டிலும் எளியோரை வலிமை படைத்தோர் நசுக்கி அவர்களின் உழைப்பை சுரண்டும் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்த ஏற்றத்தாழ்வை போக்கத்தான் ஜனநாயகம் அவசியம் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற போக்குதான் சரியானது. ஆனால் இந்தியா தன்னை ஜனநாயகமான ஒரு நாடாக அறிவித்துக்கொண்டாலும் இந்தியா ஜனநாயக நாடு கிடையாது. சமூகத்தில் சமத்துவம் உருவாகாத நாடு தன்னை ஒருபோதும் ஜனநாயக நாடு என்று அழைத்துக்கொள்ள முடியாது. ஒருவேளை அப்படி ஒரு நாடு தன்னை அறிவித்துக்கொண்டால் அது மிகப்பெரும் ஒரு முரண்.
இந்தியா 77 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த முரணிலேயே தான் தொடர்ந்து வருகிறது. 77 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இன்னமும் மாறாமல் இருக்கக்கூடிய அவலம் பிறப்பால் உயர்வுதாழ்வு கருதுவது.
ஆனால் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளையும் உடைக்க கூடிய வல்லமை காதல் ஒன்றுக்குத்தான் இருக்கிறது, நிறம், மதம், இனம் மொழி என எந்த தடைகளும் அன்பு கொண்ட நெஞ்சத்திற்கு தெரியாது. ஆனால் அந்த காதலை கைக்கொள்ள முயலும் ஒவ்வொருவரும் சமூகத்தின் முன் குற்றவாளியாக்கப்படுகின்றனர் இல்லையெனில் கொல்லப்படுகின்றனர். எத்தனை விதமான ஆணவப்படுகொலைகளை நாம் பார்த்திருப்போம். பெற்ற பிள்ளைகளை கொள்ளும் அளவிற்கு சாதி ஊறிப்போன ஒரு சமூகம்தான் இந்திய சமூகம்.
மாதா மாதம் ஏதேனும் ஒரு சாதிய வன்கொடுமை சம்பவம் நாட்டையே திரும்பி பார்க்க வைத்தாலும், சமூகத்தின் கள்ள மவுனம் தொடர்ந்து காக்கப்பட்டுக்கொண்டே தான் வருகிறது. அப்படி கோர சம்பவம்தான் மீண்டும் நடந்துள்ளது. இந்தியா முழுமைக்கும் சாதி பரவி இருந்தாலும், அதன் தீவிரத்தன்மையில் சில மாறுபாடுகள் உண்டு. இந்தியாவின் வட மாநிலங்கள் மிக மிக மோசமான சாதிய தீண்டாமை வன்கொடுமைகளை இன்றளவும் நிகழ்த்தி வருகின்றன.
மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் பகுதியைச் சேர்ந்த சக்ஷம் டேட் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆஞ்சல் என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். சக்ஷம் டேட் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், ஆஞ்சலின் குடும்பத்தினர் இவர்களின் காதலுக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் காதலர்கள் இருவரும், பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. எங்கே இது நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஆஞ்சலின் சகோதரர்களும், அவருடைய தந்தையும் சக்ஷம் டேட்டைக் கொடூரமாகத் தாக்கி, சுட்டுக்கொலை செய்து, அவரின் முகமே அடையாளம் தெரியாதவாறு நசுக்கியிருக்கின்றனர். இந்தக் கொடூரக் கொலையால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சக்ஷம் டேட் கொலை செய்யப்பட்டதை அறிந்த ஆஞ்சல், தனது குடும்பத்தாரிடமிருந்து தப்பித்து, சக்ஷம் டேட்டின் இறுதிச் சடங்கு நடக்கும் இடத்துக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் முகத்தில் மஞ்சள் பூசி, போட்டு வைத்து தனது காதலனின் சடலத்துடன் திருமணம் செய்துகொண்டார். இந்த சம்பவம் அந்த கிராமத்தினரையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
"இந்தத் திருமணம் நடக்கக்கூடாது என்பதற்குத்தானே எல்லாம். என் அப்பா, அண்ணனின் ஆசை நடக்கவில்லை. அவர்கள் தோற்றுவிட்டார்கள், என் காதலன் வென்றுவிட்டான். அவர்கள் கொலை செய்தது என் காதலனைத்தான், என் காதலை அல்ல. இனி சக்ஷமின் மனைவியாக, அவர் அப்பா அம்மாவுக்கு மருமகளாக அவர் வாழ்ந்த வீட்டிலேயே வாழ்வேன். இந்தக் கொடூரக்கொலையை அரங்கேற்றிய என் குடும்பத்தாருக்குக் கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும்" என்று ஆஞ்சல் பேசியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.