க்ரைம்

விபத்து அல்ல.. பக்கா பிளான்! மீண்டும் ஒரு 'ஹனிமூன் படு கொலை' - சிக்கிய 'கில்லாடி' மனைவி

அஞ்சுவின் வாக்குமூலத்திற்கும் அங்குள்ள சூழலுக்கும் பெரும் முரண்பாடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது...

மாலை முரசு செய்தி குழு

ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்ரீ கங்காநகர் பகுதியில் ஜனவரி 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நடந்த ஒரு விபத்து, தற்போது மாநிலத்தையே உலுக்கியுள்ள திட்டமிட்ட படுகொலையாக மாறியுள்ளது. ஆஷிஷ் மற்றும் அஞ்சு என்ற தம்பதிக்குத் திருமணமாகி வெறும் மூன்று மாதங்களே ஆன நிலையில், அன்று இரவு நடைப்பயிற்சி சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆஷிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அஞ்சு மயக்க நிலையில் கிடந்ததாகவும், அவரது தங்க நகைகள் திருடப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், ஒரு சாதாரண 'ஹிட் அண்ட் ரன்' விபத்தாகத் தோன்றிய இந்த வழக்கில் காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில், மேகாலயாவில் சில காலத்திற்கு முன்பு நடந்த 'ஹனிமூன் கொலை' போன்றே இதுவும் அரங்கேற்றப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சம்பவத்தன்று இரவு சுமார் 9 மணிக்கு வீதியில் இருவர் மயங்கிக் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்தனர். ஆஷிஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். ஆஷிஷின் உடலில் இருந்த காயங்கள் மற்றும் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் காவல்துறையினருக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தின. மேலும், விபத்து என்று சொல்லப்பட்ட போதிலும் அஞ்சுவுக்கு எந்தவிதக் காயமும் ஏற்படாமல் தப்பியது எப்படி என்ற கேள்வியும் எழுந்தது. தடயவியல் நிபுணர்கள் அந்த இடத்தை ஆய்வு செய்தபோது, அஞ்சுவின் வாக்குமூலத்திற்கும் அங்குள்ள சூழலுக்கும் பெரும் முரண்பாடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

காவல்துறையினர் அஞ்சுவின் அலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது, அவர் தனது முன்னாள் காதலனான சஞ்சு என்பவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரியவந்தது. திருமணமான மூன்று மாதங்களில் அஞ்சு மகிழ்ச்சியாக இல்லை என்றும், தனது பிறந்த வீட்டிற்குச் சென்றபோது சஞ்சுவுடன் மீண்டும் பழகி, கணவனைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டியதும் அம்பலமானது. திட்டத்தின்படி, ஜனவரி 30 இரவு ஆஷிஷை ஆள் நடமாட்டமில்லாத சாலைக்கு அஞ்சு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு புதருக்குள் மறைந்திருந்த சஞ்சு மற்றும் அவரது நண்பர்களான ராக்கி, பாதல் ஆகியோர் ஆஷிஷை கொடூரமாகத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடியுள்ளனர்.

இந்தக் கொலையை ஒரு கொள்ளைச் சம்பவமாக மாற்ற அஞ்சு தனது கம்மல் மற்றும் அலைபேசியை தனது காதலனிடமே கொடுத்துவிட்டு, சாலையில் மயங்கி விழுந்தது போல நடித்துள்ளார். ஆனால், காவல்துறையின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் ஒட்டுமொத்த சதித்திட்டமும் உடைந்தது. தற்போது அஞ்சு, அவரது காதலன் சஞ்சு மற்றும் கூட்டாளிகள் இருவர் என மொத்தம் நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேகாலயாவில் தனது கணவன் ராஜாவை, காதலனுடன் சேர்ந்து ஹனிமூன் சென்ற இடத்தில் கொன்ற சோனம் ரகுவன்சியின் சம்பவத்தை இந்த ராஜஸ்தான் கொலை நினைவுபடுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.