Ranipet Jeeva Murder Case 
க்ரைம்

“வெட்டுக்காயங்களுடன் புற்களுக்கு நடுவே கிடந்த சடலம்” - நெருங்கிய நண்பர்களே செய்த சம்பவம்.. ஜீவா கொலையில் வெளிவந்த உண்மை!

நண்பர் என்ற அடிப்படையில் ரஃபீக், ஜீவாவிடம் கார் மற்றும் நகைகளைக் கொடுத்திருந்ததாகவும்...

Mahalakshmi Somasundaram

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே கார், நகை மற்றும் பணத்தைத் திருப்பிக் கேட்ட நண்பரை பட்டாக்கத்தியால் வெட்டிக் கொலை செய்ததாக அவரது நெருங்கிய நண்பர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், வீ.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதுடைய ஜீவா. இவர் கடந்த (அக் 21) ஆம் தேதி இரவு வன்னிவேடு பகுதியில் சாலையோரம் கோரப்புற்கள் நிறைந்த இடத்தில் உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார், ஜீவாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் உத்தரவின்பேரில், வாலாஜாபேட்டை காவல் ஆய்வாளர் சக்திகணேஷ் தலைமையில் சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையில் தொடர்புடையவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், வாலாஜாபேட்டை அருகே உள்ள சுங்கச்சாவடிப் பகுதியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், வாலாஜாபேட்டை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த ரஃபீக் (35), டி.என்.சி. தெருவைச் சேர்ந்த அமீன் பாஷா (42), சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த அஜித் (25) ஆகியோர் ஜீவா கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசாரின் விசாரணையின்படி, ஜீவாவும் ரஃபீக்கும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததுடன், தொழில் ரீதியாகவும் தொடர்பில் இருந்துள்ளனர். நண்பர் என்ற அடிப்படையில் ரஃபீக், ஜீவாவிடம் கார் மற்றும் நகைகளைக் கொடுத்திருந்ததாகவும், அமீன் பாஷாவும் அவரிடம் பணம் கொடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இவற்றைத் திரும்பக் கேட்டபோது ஜீவாவுக்கும் ரஃபீக் உள்ளிட்டோருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சம்பவத்தன்று ரஃபீக் உள்ளிட்ட மூவரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஜீவாவை வன்னிவேடு பகுதிக்கு வரவழைத்த ரஃபீக், தன்னிடம் இருந்த கார் மற்றும் நகைகளைத் திருப்பித் தருமாறு கேட்டுக் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மூவரும், ஜீவாவை பட்டாக்கத்தியால் உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டிக் கொலை செய்துவிட்டு, அவரது உடலைக் கோரப்புற்கள் நிறைந்த பகுதியில் வீசிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ரஃபீக், அமீன் பாஷா, அஜித் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், கொலைக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பட்டாக்கத்தி, ஆட்டோ மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.