Relatives receive kavins dead body Relatives receive kavins dead body
க்ரைம்

“கவினின் உடல் ஒப்படைப்பு” - ஐந்து நாட்களுக்கு பிறகு உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்!

உடலை ஒப்படைக்க ஏற்பாடுகள் நடைபெற்று நிலையில் தற்போது கவினின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Mahalakshmi Somasundaram

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்செல்வி. ஆசிரியை. இவர்களது மகன் கவின் செல்வ கணேஷ்(வயது 27). இவர் சென்னையில் ஐ.டி.ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 27-ந்தேதி தனது தாத்தாவை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது அதே பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன்-கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மகன் சுர்ஜித்(24) என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் வழக்குப்பதிவு செய்தார். உதவி கமிஷனர் சுரேஷ் விசாரணை நடத்தியதில் தனது சகோதரி சுபாஷினியுடனான காதலை கைவிட வலியுறுத்தி அதனை கேட்காத காரணத்தினால் கவினை, சுர்ஜித் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு தூண்டுதலாக சுர்ஜித்தின் பெற்றோர் செயல்பட்டதாகவும், அவர்களை கைது செய்யும் வரை கவின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் உறவினர்கள் தெரிவித்து வந்தனர். 

இதனை தொடர்ந்து சுர்ஜித்தின் பெற்றோர்களான சப்-இன்ஸ்பெக்டர்கள் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் சரவணன் கைது செய்யப்பட்டார். இதனிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கு குறித்த ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. ராஜ்குமார் நவ்ரோஜிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று முதலே சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

Relatives receive kavins dead body

இந்நிலையில் கவினை காதலித்ததாகவும், அது தனது பெற்றோருக்கு தெரியாது எனவும் சுபாஷினி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் கவின் உடலை பெற்றுக்கொள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி., ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. என பல்வேறு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

மேலும் கவின் பெற்றோரை சந்தித்து பா.ஜ. க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, த.ம.மு.க. ஜான்பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் என பல்வேறு தரப்பினரும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் கவின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று காலை அவரது உடலை பெற்றுக்கொள்ள கவின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

அதன்படி கவினின் தந்தை சந்திரசேகர், சகோதரர் பிரவீன், தாய்மாமன் இசக்கிமுத்து மற்றும் உறவினர்கள் பாளையங்கோட்டையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு இன்று காலையில் வந்தனர். அங்கு உடலை ஒப்படைக்க ஏற்பாடுகள் நடைபெற்று நிலையில் தற்போது கவினின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.