
2026 ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பிரச்சாரக்களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்திலும், சென்ற முறை விட்டதற்கும் சேர்த்து இந்த முறை ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என அதிமுகவும், மாறி மாறி போட்டி போட்டு வருகின்றனர். அரசியல் ரீதியாக கூட்டணியை வலுப்படுத்துதல், தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ளுதல் என ஒரு பக்கம் இரு கட்சிகளும் பரபரப்பாக வேலைகள் செய்து கொண்டிருக்கின்றன.
மறுபக்கம் பிரச்சாரம் செய்து தாங்கள் செய்த நன்மைகளையும், எதிர்க்கட்சிகளை பற்றிய விமர்சனங்களையும் மக்களிடையே எடுத்து முன்வைக்கின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரிலும். திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின், “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரிலும் தங்களது கட்சியை வெற்றியடைய செய்ய பிரச்சாரம் செய்து ஒருவரை ஒருவர் மாறி மாறி சாடிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டுள்ள “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக அதிமுகவின் ஐடி விங் குழு "பொய்களின் முதல்வன்" என்ற பெயரில் ஒரு காணொளியை புதுமையான முயற்சியில் வெளியிட்டு உள்ளனர். அந்த காணொளியில் உண்மையை கண்டறியும் இயந்திரத்தை நடுவில் வைத்து கொண்டு, ஒரு பக்கம் ஒரு செய்தியாளர் கேள்வி கேட்பது போலவும், அதற்கு எதிர்ப்பக்கமாக திமுகவை முன்னிலைப்படுத்தி அமர்ந்திருக்கும் தலைவர் ஒருவர் பதில் சொல்லும் விதமாக அமைத்திருக்கின்றனர்.
செய்தியாளர் அதில் “நீங்கள் ஒரு அரசியல் வாரிசா என கேள்வி எழுப்ப அதற்கு எதிர் தரப்பில் அமர்ந்துள்ளவர் ஆம் என பதிலளிக்கிறார், அதற்கு இயந்திரமும் உண்மை என இயந்திரத்தின் திரையில் காட்டுகிறது. மேலும் செய்தியாளர் தமிழர்களுக்கு தமிழகத்தில் வேலை வாய்ப்பு, விவசாய கடன் தள்ளுபடி, விடியல் ஆட்சி, இதை எல்லாம் செய்தீர்களா என கேட்க, அவர் செய்தேன் என பதிலளிக்கிறார். ஆனால் உண்மையை கண்டறியும் இயந்திரம் இது பொய் என திரையில் காட்டுகிறது” இது போல மற்றும் சில கேள்வி பதில்களை கேட்பது போலவும் அதற்கு எதிர்தரப்பில் அமர்ந்திருப்பவர் அளிக்கும் பதிலை இயந்திரம் உண்மை, பொய் என காட்டுவது போலவும் இந்த காணொளி அமைந்திருக்கிறது.
கடைசியாக இந்த காணொளியில் செய்தியாளர் “தமிழ் மக்கள் உங்களை விரட்டி அடிக்கப்போகிறார்களா?” என கேட்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் எதிரில் அமர்ந்திருப்பவர் பதட்டமடைவது போலவும், இயந்திரம் இதற்கு உண்மை என பதிலளிப்பது போலவும் காணொளியை முடித்து திமுகவை நேரடியாக தாக்கும் விதமாக காணொளியை அமைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.