salem gang harassment issue  
க்ரைம்

“மது கொடுத்து சிறுமிக்கு ஓராண்டாக பாலியல் தொல்லை” - பிறந்தநாள் விழாவில் தொடங்கிய அத்துமீறல்.. யார் அந்த 14 பேர் கொண்ட கும்பல்?

14 பேர் கொண்ட கும்பல், கடந்த ஓராண்டாக சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியை 16 மற்றும் 17 வயதுடைய தனது இரு தோழிகளுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற 13 வயது சிறுமியின் பிறந்தநாள் விழாவுக்கு அவரது தோழிகள் இருவரும் தங்களது ஆண் நண்பர்களை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பிறந்தநாள் விழாவுக்கு வந்த சிலர், சிறுமிகளுக்கு கட்டாயப்படுத்தி மதுபானம் கொடுத்து, அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, சிறுமிகளை தொடர்ந்து கண்காணித்து வந்த அந்த கும்பல், தனிமையான இடங்களுக்கு அழைத்துச் சென்று மதுபானம் கொடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, 13 வயது சிறுமி தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இருந்ததால், பள்ளி நிர்வாகத்தினர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அவரது தாயார், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தியபோது, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமியின் தோழிகள் மற்றும் அவர்களது ஆண் நண்பர்கள் உள்ளிட்ட 14 பேர் கொண்ட கும்பல், கடந்த ஓராண்டாக சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில், இந்த வழக்கு சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி, முதற்கட்டமாக 7 பேரை அடையாளம் கண்டுள்ளனர்.

அவர்களில் 16 வயதுடைய இருவர், 18 வயதுடைய ஒருவர் மற்றும் 20 வயதுடைய ஒருவர் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் எஞ்சிய நபர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதேபோல், பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியைத் தவிர, அவருடன் பழகி வந்த 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுமிகளுக்கும் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 13 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து, ஓராண்டாக கும்பல் ஒன்று பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படும் சம்பவம் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்