சேலம் மாவட்டம், சொக்கம்பட்டி அருகே உள்ள சின்னனூர் பகுதியை சேர்ந்தவர் 30 வயதுடைய சதீஷ்குமார். இவர் அதே பகுதியில் மின்சாரத் துறையில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார். சதீஷ்குமார் கடந்த (செப் 17) ஆம் தேதி மாலை சின்னத்திருப்பதி கூட்டுறவு சொசைட்டி அருகே உள்ள தனது பெரிய மாமியார் இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்றுள்ளார். பின்னர் அங்கு இறுதி சடங்கில் இறந்தவரின் உடலுக்கு மாலை அணிவித்த சதிஷ் இரவு 12 மணியளவில் மெயின் ரோட்டிற்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
அதன் பிறகு அவரை காணவில்லை. எங்கு தேடியும் சதிஷ் கிடைக்காததனால் இது தொடர்பாக அவரது தாயார் மலர்கொடி கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை பரிசோதனை செய்துள்ளனர். அதில் சதீஷ்குமாரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஆம்னி காரில் கடத்தி சென்ற கட்சி பதிவாகியிருந்தது.
சிசிடிவி காட்சியை வைத்து அந்த காரில் பயணித்த நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது “சதீஷ் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி போதையில் சாலையில் நின்று கொண்டு சத்தம் போட்டு ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது நள்ளிரவு 12.45 மணி அளவில் அந்த வழியாக வந்த வெள்ளை நிற ஆம்னி வேனை மறித்து தகராறு செய்துள்ளார். அந்த வேனில் வந்த கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ரவுடி மணிகண்டன்(39), அவனது கூட்டாளிகளான மற்றொரு மணிகண்டன்(36), மணிவண்னன்(36), கண்ணன்(30) ஆகியோரும் போதையில் இருந்துள்ளனர்.
சதீஷ் காரணமில்லாமல் தங்களை வழிமறித்து வம்பிழுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் சதீஷ்குமாரை வேனுக்குள் தூக்கிப்போட்டு கொண்டு வேகமாக சென்றுள்ளனர். பின்னர் நான்கு பெரும் சேர்ந்து தாக்கியதில் சதீஷ்குமார் உயிரிழந்து விட்டதும், பின்னர் அவரின் உடலை ஈரோடு மாவட்டம் பவானிக்கு கொண்டு சென்று அங்கு காவிரி ஆற்றில் வீசிவிட்டு சென்றதும்” விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து ஆற்றில் வீசப்பட்ட சதீஷ்குமாரின் உடலை கடந்த 2 நாட்களாக தேடிவந்த போலீசார் சடலத்தை ஈரோடு மாவட்டம் அக்ரஹாரம் பகுதியில் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.