சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட தூதனூர் பகுதியைச் சேர்ந்தவர் 70 வயதுடைய பாவாயி. இவர் அதே பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அதே போல் பாவாயி வீட்டுக்கு அருகில் வசித்து வந்தவர் 75 வயதுடைய மூதாட்டி பெரியம்மாள். இவர் ஆடு மாடுகளை மேய்த்து வழக்கை நடத்தி வந்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நேற்று காலை 9 மணிக்கு வேலைக்கு செல்கிறோம் என வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாமல் இருந்துள்ளனர்.
இதனால் பதட்டமடைந்த மூதாட்டியின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வழக்கமாக அவர்கள் செல்லும் விவசாய நிலங்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மூதாட்டிகளை தேடியுள்ளனர். எங்கு தேடியும் இருவரும் கிடைக்காத நிலையில் இது குறித்து உறவினர்கள் காணாமல் போன மூதாட்டிகளை மீட்டு தர கோரி மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் அளித்தனர். புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து இருவரையும் தேடிவந்தனர்.
இந்த நிலையில் தூதனூர் என்ற பகுதியில் அம்மாசி என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் உள்ள தண்ணீரில் காணாமல் போன இரண்டு மூதாட்டிகளும் சடலமாக மிதந்திருக்கின்றனர். இதனை பார்த்த கல்குவாரிக்கு வேலைக்கு சென்ற தொழிலாளிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகுடஞ்சாவடி தீயணைப்பு துறை வீரர்கள் உதவியோடு இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் -
மேலும் மூதாட்டிகள் கழுத்து மற்றும் காதுகளில் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதால் நகைக்காக இரண்டு மூதாட்டிகளையும் கொலை செய்து கல்குவாரி தண்ணீரில் வீசி சென்றார்களா? அல்லது ஏதெனும் முன்பகை காரணமாக கொலை நடந்ததா? என பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன மூதாட்டிகள் கல்குவாரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.