Salem Rowdy David Murder Case 
க்ரைம்

“ஒரே பெண்ணுடன் தொடர்பில் இருந்த பிசினஸ் பார்ட்னர்கள்” - அடுத்தடுத்து நடந்த தகராறு.. தலையில் 40 முறை வெட்டி கொல்லப்பட்ட ரவுடி!

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த டேவிட்டுக்கும், அவரது நண்பர் அமிர்தராஜுக்கும் இடையே தொழில் போட்டி...

Mahalakshmi Somasundaram

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி டேவிட், கடந்த (அக் 26) ஆம் தேதி புதுரோடு மேம்பாலத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரேதப் பரிசோதனையில் டேவிட்டின் பின் தலையில் மட்டும் 40 வெட்டுக் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய, காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதன் ஒரு பகுதியாக, கொலையில் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படும் கூலிப்படையைச் சேர்ந்த 7 பேரை போலீசார் ஏற்கெனவே கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சேலம் அம்மாபேட்டை வித்யா நகரைச் சேர்ந்த விக்ரம், குமரகிரி ஏரியைச் சேர்ந்த தினேஷ், பெரியகிணறு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் ஆகிய மேலும் 3 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். டேவிட்டை பின் தொடர்ந்து கண்காணித்து, கொலைக்கான திட்டத்தைச் செயல்படுத்த உதவியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே, டேவிட் கொலை செய்யப்பட்டதற்கான பின்னணி குறித்த தகவல்களும் போலீஸ் விசாரணையில் வெளியாகியுள்ளன. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த டேவிட்டுக்கும், அவரது நண்பர் அமிர்தராஜுக்கும் இடையே தொழில் போட்டி காரணமாகப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், டேவிட் பழகி வந்த பெண்ணுடன் அமிர்தராஜும் பழகியதால் இருவருக்கும் இடையே கூடுதல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் தனித்தனியாகத் தொழில் செய்து வந்துள்ளனர். இந்தச் சூழலில், ஒரே நிலத்தைப் பலரிடம் காட்டி சுமார் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் அமிர்தராஜை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அப்போது சிறையில் இருந்த ரவுடி தினதயாளனுக்கும் டேவிட்டுக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்த விவரத்தை அமிர்தராஜ் அறிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

Salem Rowdy David Murder Case

இதையடுத்து, தினதயாளனும் அமிர்தராஜும் கூட்டுச் சேர்ந்து டேவிட்டைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காகக் கூலிப்படையினரை ஏவி, சுமார் ஒரு வாரமாக டேவிட் செல்லும் இடங்கள், அவர் பயன்படுத்தும் வழித்தடங்கள் ஆகியவற்றைக் கண்காணித்துள்ளனர். பின்னர், திட்டமிட்டபடி கடந்த (அக் 26) ஆம் தேதி புதுரோடு மேம்பாலத்தில் டேவிட்டை வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில், கொலை நடந்த போது டேவிட்டை வழிமறித்துத் தாக்கிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படும் 7 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது, கொலைக்குத் திட்டமிட்டு டேவிட்டை நோட்டமிட்டதாகக் கூறப்படும் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தக் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் தினதயாளன் மற்றும் அமிர்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ரவுடி டேவிட் கொலை வழக்கில் அடுத்தடுத்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள இருவரைப் பிடிக்கத் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.