“ஜாமீனில் வந்த ரவுடி வெட்டி கொலை” - மேம்பாலத்திற்கு அடியில் கிடந்த சடலம்.. சரணடைந்த குற்றவாளிகள் சொல்வது என்ன?

இவர் மீது கொலை, நில மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக..
Salem Junction David Murder Case
Salem Junction David Murder Case
Published on: 
Updated on: 
2 min read

சேலம் அருகே கொலை, நில மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஜங்ஷன் டேவிட், மர்ம கும்பலால் நேற்று (அக் 26) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக 7 பேர் கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். சேலம் சூரமங்கலம் அருகே ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான ஜங்ஷன் டேவிட். இவர் மீது கொலை, நில மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், 18 நாட்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இரும்பாலை சாலையில் உள்ள புதுரோடு மேம்பாலம் அருகே வந்த போது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் கும்பலில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்டோர், ஜங்ஷன் டேவிட்டை ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியதாகத் தெரிகிறது. அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற டேவிட், மேம்பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளார்.

Salem Junction David Murder Case
Salem Junction David Murder Case

இருப்பினும், தொடர்ந்து தாக்கப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சூரமங்கலம் போலீசார், ஜங்ஷன் டேவிட்டின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காவல் ஆணையாளர் பாபு உத்தரவின்பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, ஜங்ஷன் டேவிட் கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ராஜன், கார்த்திக், சுலைமான், மோகன், ரகு, அருண்குமார், மணிகண்டன் ஆகிய 7 பேர் சேலம் கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜங்ஷன் டேவிட் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com