தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர்மன்றத் துணைத் தலைவரும், அதிமுக மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளருமான 55 வயதுடைய கண்ணன் என்ற ராஜு மீது, அவரது உறவினர் பெண் பாலியல் அத்துமீறல் புகார் அளித்துள்ளார். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், பின்னர் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் 45 வயதுடைய ரதி என்பவர், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அதில், கண்ணன் என்ற ராஜு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்குத் திருமணமான பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்ததாகவும், அப்போது மீண்டும் தன்னைப் பார்த்துக்கொள்வதாகக் கூறிய ராஜு, தன்னுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த உறவின் மூலம் தனக்குக் குழந்தை பிறந்ததாகவும், தற்போது அந்தக் குழந்தை தனக்குப் பிறந்தது என்பதை ராஜு மறுப்பதாகவும் ரதி குற்றம்சாட்டியுள்ளார். தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் வலியுறுத்தியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கண்ணன் என்ற ராஜு மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 64 மற்றும் 351(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக நகர்மன்ற துணைத் தலைவர் மீது அவரது உறவினர் பெண்ணே பாலியல் அத்துமீறல் புகார் அளித்துள்ள சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறுவயதில் பாலியல் வன்கொடுமை ஆளாகி மீண்டும் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த நிலையில் ரதியிடமும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்