Porur Bus Conductor Assault 
க்ரைம்

நல்ல புத்திமதி சொன்ன பேருந்து நடத்துநரை.. பிரித்து மேய்ந்த பள்ளி மாணவர்கள் - தலைநகர் சென்னையில் நடந்த கொடூரம்!

படியில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதாலும், அந்த பேருந்து பயணிகள் ஏறியதும் கதவினை மூடும் வசதியினை கொண்டதாலும் நடத்துநர் அவர்களை உள்ளே அழைத்துள்ளார்.

Vinvizhi Leninton

போரூர்: பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த நிலையில் அவர்களை உள்ளே வரக் கூறிய நடத்துநர் மீது மாணவர்கள் சரமாரி தாக்குதல்கள் நடத்திய காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

சென்னை போரூரில் பள்ளி மாணவர்கள் காலையில் பள்ளிக்கு செல்வதற்காக 26 எண் கொண்ட ஐயப்பன்தாங்கலில் இருந்து வடபழனி நோக்கி சென்று கொண்டு இருந்த அரசு பேருந்தில் ஏறியுள்ளனர். ஆனால், உள்ளே சென்று அமராமல், படியில் நின்றுள்ளனர். படியில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதாலும், அந்த பேருந்து பயணிகள் ஏறியதும் கதவினை மூடும் வசதியினை கொண்டதாலும் அந்த பேருந்தின் நடத்துநர் அவர்களை உள்ளே அழைத்துள்ளார்.

இதனால் மாணவர்களுக்கும், நடத்துநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, ஆத்திரமடைந்த மாணவர்கள் ஓடும் பேருந்தில் நடத்துநரின் மீது சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளனர். மேலும், இந்த தாக்குதலை அடுத்து, பேருந்தில் இருந்த சில பயணிகள் தகராறை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், மாணவர்கள் மீண்டும் மீண்டும் அந்த நடத்துநரின் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலை அடுத்து அரசு பேருந்தானது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. நிறுத்திய பேருந்தில் இருந்து அவசர அவசரமாக சக பயணிகள் இறங்கி சென்று கொண்டிருக்க, அந்த மாணவர்களில் ஒருவர் ஆவேசமாக இறங்கி வரும் காட்சியும் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தை பேருந்தில் இருந்த சக பயணி ஒருவர் தனது கைபேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவானது தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தாக்குதலினால் அந்த நடத்துநருக்கு வாய்ப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பின்னர், பள்ளி நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்று பயணிகள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது போலீசார் அந்த மாணவர்கள் குறித்தும், ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தாக்குதலுக்காக காரணங்கள் குறித்தும் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்