க்ரைம்

“15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை” - ஆட்டோ டிரைவரின் கொடூரம்! நெல்லை போக்ஸோ நீதிமன்றதின் அதிரடி தீர்ப்பு!

ஆட்டோவில் இருந்த மற்ற பயணிகளை இறக்கிவிட்ட அவர், மதுக்கடையில் மது பாட்டில் வாங்கி

Muthu Lakshmi

ஆலங்குளத்தில் இருந்து 15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (42). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி இரவு ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது, தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியையும் ராமச்சந்திரன் தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டார்.

வழியிலேயே ஆட்டோவில் இருந்த மற்ற பயணிகளை இறக்கிவிட்ட அவர், மதுக்கடையில் மது பாட்டில் வாங்கிக் கொண்டு, முக்கூடல் கலியன்குளம் ஆர்ச் அருகே உள்ள இருட்டான பகுதிக்குள் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார். இருட்டான பகுதிக்குள் ஆட்டோ செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி, ராமச்சந்திரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் சிறுமியை மிரட்டி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. பின்னர் தப்பிக்க முயன்ற சிறுமியை கொடூரமாக தாக்கிய ராமச்சந்திரன், அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஆட்டோ டிரைவர் ராமச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சங்கரேஸ்வரி மற்றும் மங்கையர்க்கரசி ஆகியோர் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜராகி, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார். கோர்ட் போலீசாக யாஸ்மின் செயல்பட்டார்.

வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், ஆட்டோ டிரைவர் ராமச்சந்திரன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, பல்வேறு பிரிவுகளின் கீழ் கடுமையான தண்டனைகளை வழங்கி தீர்ப்பளித்தார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் ராமச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், சிறுமியை தனது ஆட்டோவில் ஏமாற்றி அழைத்துச் சென்ற குற்றத்திற்காக இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 417ன் கீழ் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. சிறுமியை கொடூரமாக தாக்கி காயம் ஏற்படுத்தியதற்காக பிரிவு 323ன் கீழ் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் வழங்கப்பட்டது. அதேபோல், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக பிரிவு 506(1)ன் கீழ் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

அனைத்து சிறை தண்டனைகளையும் ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி, மொத்தமாக ஆயுள் தண்டனையும் ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.