school girl commited suicide 
க்ரைம்

“கன்னத்தில் அறைந்து… முட்டிப்போட வைத்து அடித்து..” 9 -ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..! வெளியான வாக்குமூல வீடியோ..!

அறிவியல் ஆசிரியர், தமிழ் ஆசிரியர், ஆங்கில ஆசிரியர் ஆகியோர் தன்னை சரியாக படிக்கவில்லை என்று கூறி...

மாலை முரசு செய்தி குழு

படிக்கும் பிள்ளைகளின் வாழ்வில் ஒழுக்கம் என்பது மிகத்தேவையான ஒரு பண்புநலன்தான் என்றாலும், அவற்றிற்காக குழந்தைகளின் உயிரையே கேட்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது, மேலும் சட்டங்களும், ஒழுங்குமுறைகளும் மனிதனின் வாழ்விலை மேம்படுத்த, எளிதாக்கதான் உருவாக்கப்பட்டதே தவிர, மனித உயிரைவிட அதுவும் ஒரு குழந்தையின் உயிரைவிட அவை மேலானவை அல்ல. அதை சமூகமும், பெற்றோரும், கல்வி நிலையங்களும் உணர வேண்டும். 

குழந்தைகளை நல்ல மனிதர்களாக மாற்றி அவர்களை சமூகத்தை சீர்படுத்தும் நல்ல மனிதர்களாக மாற்றுவது, ஆசிரியர்களின் கடைமை. ஆனால் சமயங்களில் சில ஆசிரியர்களே மாணவர்களின் நம்பிக்கையை குறைத்து அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடுகின்றனர். அப்படி ஒரு சமபவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துவேல் குமரன்- வல்ஷா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் முத்து சஞ்சனா வால்பாறை ரொட்டி கடைப் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 10 -ஆம் தேதி முத்து சஞ்சனா, மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார். பலத்த தீக்காயங்களுடன் அக்கம்பக்கத்தினர் முத்து சஞ்சனாவை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டார். மேலும் தீவிர சிகிச்சை தேவைப்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று இரவு உயிரிழந்தார். 

ஆசிரியர்கள் நடத்திய தாக்குதல் 

மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு, பள்ளி ஆசிரியர்கள் மூவர் தான் காரணம், சக மாணவர்கள் முன்பு தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளனர் என்று மாணவியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

மேலும் இது குறித்து சிகிச்சையில் இருந்தபோது மாணவி அளித்த வாக்குமூலத்தின் வீடியோவும் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், அறிவியல் ஆசிரியர், தமிழ் ஆசிரியர், ஆங்கில ஆசிரியர் ஆகியோர் தன்னை சரியாக படிக்கவில்லை என்று கூறி பரீட்சை அட்டையை தூக்கி வீசியதாகவும், கன்னத்தில் அறைந்ததாகவும் முட்டி போட வைத்து பனிஷ்மென்ட் தந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேட்டியளித்த மாணவியின் பெற்றோர் “இனி இது போன்று ஒரு நிலை வேறு எந்த குழந்தைகளுக்கும் வந்துவிட கூடாது” என கண்ணீர் மல்க தெரிவித்தனர். இது குறித்து பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சுதா, இது குறித்து ஆசிரியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், ஆசிரியர்களுக்கு பிரத்யேக வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.