க்ரைம்

எல்லாமே செட்டப்.. பாம்பு வாந்தியும் எடுக்கல.. பூந்தியும் எடுக்கல..!!!

கன்னியாகுமரியில் சாமியார் மீது இளம்பெண் ஒருவர் புகார் அளித்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

கன்னியாகுமரி | நாகர்கோயில் இருகே களியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். தன்னை ஒரு நாகம் என கூறிக் கொள்ளும் இவர் மீது சில நாட்களுக்கு முன்பு தம்மத்து கோணம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சாமியார் சுரேஷ்குமார் மீது அதிரடி புகார் ஒன்றை அளித்திருந்தார். 

சாமியார் சுரேஷ் இரவு நேரங்களில் பாம்புகளோடு உறங்குவதாகவும், அப்போது பாம்புகளின் வாயில் இருந்து வரும் நவரத்தினக் கற்கள் எனக்கூறி தன்னிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாகவும் இரணியல் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இரணியல் போலீசார் சுரேஷ்குமார் மற்றும் அவரது உதவியாளர் அசோக்குமாரை கைது செய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பே சாமியார் சுரேஷ்குமாருக்கு சனத் என்பவருடன் நட்பு உண்டானது. கப்பலில் பணியாற்றும் சனத் அதே பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வந்துள்ளார். இதற்காக சுரேஷ்குமாரிடம் இருந்து குறிப்பிட்ட அளவு தொகையை கடனாக வாங்கியிருந்தார் சனத். 

இதையடுத்து நாகராஜா கோவிலுக்கு குடமுழுக்கு செய்தபோது சுரேஷ்குமாருக்கும் சனத்துக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை எழுந்ததாக தெரிகிறது. 

இதையடுத்து ஒருவருக்கொருவர் அளித்துக் கொண்ட பரிசுப் பொருட்களையும் திருப்பி வாங்கியதோடு பரஸ்பரம் பிரிந்து போயினர். ஆனால் சுரேஷ்குமாரிடம் இருந்து வாங்கிய பணத்தை மட்டும் சனத் திருப்பி அளிக்காமல் குடும்பத்தோடு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து வாங்கிய கடனை திரும்ப கேட்டார் என்ற ஒரே காரணத்துக்காக சாமியாரை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும் என நினைத்து ஆடிய நாடகம்தான் இது என சாமியாரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். 

கொடுத்த கடனை திருப்பி கேட்ட சாமியாரை சிக்க வைக்க இளம்பெண் நாக முத்து மீது மோசடி புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.