akila  
க்ரைம்

“கணவன் வீடியோ எடுக்காததால் உயிரிழந்த மனைவி” - எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை.. தாயில்லாமல் தவிக்கும் 6 மாத குழந்தை!

உடனடியாக தாய் வீட்டில் இருந்து கிளம்பி தனது மாமியார் வீட்டிற்கு தனியாக சென்றுள்ளார்...

Mahalakshmi Somasundaram

தெலுங்கானா மாநிலம், வரங்கல் மாவட்டம் நெக்கொண்டா மண்டலம் பொல்லிகொண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயதுடைய அகிலா . இவருக்கும், மஹபூபாபத் பகுதியை சேர்ந்த தனியார் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் பானோத் ஹுசைனுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் அகிலா தனது குழந்தையுடன் பொல்லிகொண்டாவில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் கடந்த (செப் 7) ஆம் தேதி மதியம் குழந்தை இடைவிடாது அழுதுகொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அகிலா குழந்தையை சமாதானம் செய்ய ஹுசைனுக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது வேலைக்கு சென்றிருந்த ஹுசைன் பணியில் பிஸியாக இருந்த நிலையில், அகிலாவின் வீடியோ காலுக்கு பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அகிலா, உடனடியாக தாய் வீட்டில் இருந்து கிளம்பி தனது மாமியார் வீட்டிற்கு தனியாக சென்றுள்ளார்.

அங்கு யாரும் இல்லாத நேரத்தில், கடும் மனஉளைச்சல் மற்றும் ஆவேசத்தில் அகிலா எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் உடனடியாக வீட்டிற்கு சென்ற அகிலாவின் தாய் மற்றும் கணவர் ஹுசைன் மயங்கிய நிலையில் கிடந்ததை அகிலாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி, திங்கள்கிழமை அதிகாலை அகிலா பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவன் போன் எடுக்காத கோபத்தால் 6 மாத குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம் பொல்லிகொண்டா பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அகிலாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது உயிரிழப்புக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்