girl kidnaped in telangana  
க்ரைம்

"நான் என் கணவருடன் தான் வாழ்வேன்" - காதல் திருமணம் செய்துகொண்ட மகளை வீடு புகுந்து கடத்திய பெற்றோர்!

பெண்ணை காப்பாற்ற முயன்ற குடும்பத்தினர் அலறியடித்தும், தாக்குதல் நடத்தியவர்கள் கார்களில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் எல்லாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞரும், அதே மாவட்டத்தின் கௌடிபள்ளி மண்டலம் சலாபத்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 6-ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கருதிய புதுமணத் தம்பதியினர், பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இருவரும் சட்டப்படி திருமண வயதை எட்டியவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் (SI) சீனிவாஸ் கவுட், இருதரப்பு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, "நான் என் கணவருடன் தான் வாழ்வேன்" என்று இளம்பெண் உறுதியாக தெரிவித்ததால், போலீசார் அவரை கணவரின் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், புதன்கிழமை பெண்ணின் குடும்பத்தினர் மூன்று கார்களில் திடீரென எல்லாப்பூர் கிராமத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. நேராக மகளின் கணவர் வீட்டிற்குள் நுழைந்த அவர்கள், இளம்பெண்ணை அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். இதற்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெண்ணின் உறவினர்கள் கணவரையும், அவரது தாயார் ஷியாமலாவையும், அண்ணன் மற்றும் அண்ணியையும் தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.

பின்னர் இளம்பெண்ணை பலவந்தமாக காரில் ஏற்றி அங்கிருந்து கடத்திச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.கண் இமைக்கும் நேரத்தில் அரங்கேறிய இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெண்ணை காப்பாற்ற முயன்ற குடும்பத்தினர் அலறியடித்தும், தாக்குதல் நடத்தியவர்கள் கார்களில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட கணவரின் குடும்பத்தினர் பாபன்னபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பினருக்கும் மெதக் வட்ட காவல் ஆய்வாளர் (CI) அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக காவல் உதவி ஆய்வாளர் சீனிவாஸ் கவுட் தெரிவித்துள்ளார்.மேலும், இருதரப்பினரிடமும் விரிவான விசாரணை நடத்தி, கவுன்சிலிங் அளித்த பிறகு சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். காதல் திருமணம் செய்து காவல் துறையிடம் பாதுகாப்பு பெற்ற சில நாட்களிலேயே, பெண் வீட்டார் கணவர் வீட்டிற்குள் புகுந்து புதுமணப் பெண்ணை பலவந்தமாக கடத்திச் சென்ற சம்பவம், தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்