க்ரைம்

“பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 17 வயது சிறுமி” - காதல் என்ற பெயரில் நடந்த கொடுமை.. இன்ஸ்டாகிராமில் பழக்கத்தால் நடந்த விபரீதம்!

சிறுமியை ஏமாற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்த சம்பவம்..

Mahalakshmi Somasundaram

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த தங்கதுரையின் மகன் 21 வயதுடைய விமல். இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு படித்து வருகிறார். இவருக்கு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம், பாவூர்சத்திரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய இந்த அறிமுகம், நாளடைவில் நெருக்கமாக மாறியதாக சொல்லப்படும் நிலையில் விமல் சிறுமியிடம் அவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

பின்னர் சிறுமியும் காதலை ஏற்றுக் கொண்டு பேசி வந்த நிலையில், "உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்" என ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியிடம் நல்லவர் போல பேசி விமல் நம்பிக்கையை பெற்றுள்ளார். தொடர்ந்து இந்த நம்பிக்கையை பயன்படுத்தி, சிறுமியை பல்வேறு சந்தர்ப்பங்களில் தனியாக வரவழைத்த விமல், அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். மேலும், இந்த சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என சிறுமியை மிரட்டி சிறுமியிடம் பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார்.

இதனால் அச்சமடைந்த சிறுமி, சில நாட்கள் இந்த சம்பவத்தை வெளியில் கூறாமல் இருந்துள்ளார். ஆனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர், இறுதியில் நடந்த அனைத்தையும் தனது பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில், திருமணம் செய்வதாகக் கூறி சிறுமியை ஏமாற்றி பாலியல் அத்துமீறலில் விமல் ஈடுபட்டது உறுதியானதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, விமலை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைந்துள்ளனர். சமூக வலைத்தளத்தின் மூலம் ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி சிறுமியை ஏமாற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்த சம்பவம், தென்காசி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அறிமுகமாகும் நபர்களிடம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் இணைய பயன்பாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இது போல கடந்த சில மாதங்களாவே சமூக வலைத்தளங்கள் மூலம் சிறுமிகளிடம் பழகி அவர்களை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவரும் சம்பவம் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து, உரிய நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.