திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு அடுத்துள்ள அரவாசபட்டடை கிராமத்தை சேர்ந்தவர் 20 வயதான ஹேமந்த். இவர் அதே தொகுதியில் பாஜகவில் பொறுப்பு வகிக்கிறார். ஆர் கே வேட்டையை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கல்லூரியில் பேருந்தில் சென்று வரும் மாணவியை ஹேமந்த் ஒரு தலை பட்சமாக காதலித்து வந்துள்ளார்.
மாணவி கல்லூரிக்கு செல்லும் போதும் வரும் போதும் அவரை பின் தொடர்ந்து ஹேமந்த் மாணவியை தொந்தரவு செய்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஹேமந்த் அந்த பெண்ணிடம் “நான் உன்னை காதலிக்கிறேன்” என கூறி சாக்லேட் கொடுத்துள்ளார். அதற்கு காதலை ஏற்க மறுத்த மாணவி தான் படிக்க வேண்டும் எனவே தன்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார்.
மாணவி கூறியதை சற்றும் காதில் வாங்காத ஹேமந்த் தொடர்ந்து மாணவியை பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் தன்னை காதலிக்க வற்புறுத்தி மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் பயந்த மாணவி வீட்டில் பெற்றோரிடம் கூறினால் படிப்பை நிறுத்தி விடுவார்களோ என பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் நாளுக்கு நாள் ஹேமந்த் மாணவியை காதலிக்க சொல்லி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
ஹேமந்த் தொந்தரவை தாங்க முடியாத மாணவி இது குறித்து தனது கல்லூரி பேராசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பேராசிரியர் மாணவி குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். எனவே கல்லூரி நிர்வாகம் பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் 17 வயது பெண்ணிற்கு காதலிப்பதாக தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் மீது புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த பள்ளிப்பட்டு போலீசார் பாஜக பிரமுகர் ஹேமந்த் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்ததில் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை இந்த பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.