Thiruvannamalai Three Girls Missing 
க்ரைம்

“ஒரே நாளில் மயமான மூன்று சிறுமிகள்” - பள்ளிக்கு சென்றவர்களுக்கு என்ன நடந்தது?.. அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கும் அதிர்ச்சி சம்பவம்!

பள்ளிக்குச் சென்ற மகாலட்சுமி மற்றும் மகேஸ்வரி ஆகிய இருவரும் வீடு திரும்பவில்லை...

Mahalakshmi Somasundaram

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே பள்ளிக்குச் சென்ற மூன்று மாணவிகள் வீடு திரும்பாத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் கேரளாவில் கூலி வேலை செய்து வரும் நிலையில், மாணவிகள் மாயமானது குறித்து விசாரணை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி ஜோதி. இந்தத் தம்பதியின் மகள்களான மகாலட்சுமி, 10ஆம் வகுப்பும், மகேஸ்வரி, 9ஆம் வகுப்பும் தண்டராம்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

மாணவிகளின் தாய் தந்தை இருவரும் கேரளாவில் கூலி வேலை செய்து வருவதால், இருவரும் தண்டராம்பட்டு பஜனை கோவில் தெருவில் பாட்டியின் பாதுகாப்பில் வாடகை வீட்டில் தங்கிப் படித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று(அக் 26) பள்ளிக்குச் சென்ற மகாலட்சுமி மற்றும் மகேஸ்வரி ஆகிய இருவரும் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது. இதனால் அவர்களைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதேபோல், மாணவிகளின் உறவினரான நித்யா என்ற 8ஆம் வகுப்பு மாணவியும் காணாமல் போயுள்ளார். இவரது பெற்றோரும் கேரளாவில் கூலி வேலை செய்து வருவதால், பாட்டி உண்ணாமலையின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.

இவரும் நேற்று பள்ளிக்குச் சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மூன்று மாணவிகளும் எங்கு சென்றனர், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். மூன்று மாணவிகளும் ஒரே நாளில் காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் பள்ளிக்கு வந்தார்களா, பள்ளி முடிந்து எப்போது வெளியேறினர், கடைசியாக எங்கு காணப்பட்டனர் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும், அவர்கள் தாங்களாகவே எங்காவது சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் காணாமல் போனார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மூன்று மாணவிகளும் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களைப் பாதுகாப்பாகக் கண்டறிந்து, அவர்கள் காணாமல் போனதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்த உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே விழுப்புரத்தில் சிறுமி மயமாகி தற்போது 15 நாட்கள் கடந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில் தற்போது மீண்டும் மூன்று சிறுமிகள் மயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்