திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் 48 வயதுடைய பிரவீனா. இவருக்கு ரமேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்று ஒரு மகள் உள்ள நிலையில், குடும்பத் தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பிரவீனாவிற்கு அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் நாளடைவில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இதன் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக குருக்கத்தி பகுதியில் இருவரும் வாடகை வீடு எடுத்து கணவன் மனைவி போல வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று(ஜூலை 28) மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிரவீனாவின் மகள், தனது தாய் வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறி சத்தமிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது, பிரவீனா ரத்தக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கீழ்வேளூர் போலீசார் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்பிரமணிய தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், பிரவீனாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் இருந்து முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சம்பவத்திற்கு முன்பு பிரவீனாவுக்கும், அவருடன் வசித்து வந்த குமாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த குமார், வீட்டில் இருந்த அரிவாளால் பிரவீனாவின் கழுத்து மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கீழ்வேளூர் போலீசார், தலைமறைவாக உள்ள குமாரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொலைக்கான பின்னணி மற்றும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பகல்நேரத்தில் வீட்டுக்குள் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குருக்கத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.