தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், முன்விரோதம் காரணமாக சலவைத் தொழிலாளி ஒருவர் நடுரோட்டில் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இளைஞரும் சம்பவத்தின் போது கீழே விழுந்து மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்செந்தூர் சரவண பொய்கை தெருவைச் சேர்ந்த சுப்பையாவின் மகன் சரவணன் (50), சலவைத் தொழிலாளியாக இருந்து வருகிறார். டி.பி. சாலையில் சலவைக் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முருகனின் மகன் பிச்சுமணி (25), தனியார் விடுதியில் பணியாற்றி வருகிறார்.
கடந்த ஐந்து மாதங்களாக, ஊர் நிர்வாகப் பொறுப்பில் உள்ள மணி என்பவருக்கும் பிச்சுமணிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பிரச்சினையில், மணி தரப்புக்கு ஆதரவாக சரவணன் செயல்பட்டதால், பிச்சுமணிக்கு அவர் மீது முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று வழக்கம்போல் தனது கடையை மூடிவிட்டு டி.பி. சாலையில் நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சரவணனை, பின்தொடர்ந்து வந்த பிச்சுமணி திடீரென அரிவாளால் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் சரவணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்தார். இருப்பினும், தாக்கிய பிச்சுமணியை தள்ளிவிட்டு அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த பிச்சுமணி மயங்கிய நிலையில் சாலை ஓரத்தில் கிடந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த சரவணன் மற்றும் மயக்க நிலையில் இருந்த பிச்சுமணி ஆகிய இருவரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதல் தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் அரிவாளை தேடும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் நடந்த இந்த அரிவாள் வெட்டு சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.