நெல்லை டவுனில் பாத்திர வியாபாரி வீட்டில் 33 பவுன் நகைகள் திருடுபோனதாகக் கூறப்பட்ட வழக்கில், அவரது மனைவியுடன் தொடர்பில் இருந்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். கணவருக்குத் தெரியாமல் நகைகள் ஏற்கெனவே எடுத்துச் செலவழிக்கப்பட்ட நிலையில், திருட்டு நடந்ததுபோல் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. திருநெல்வேலி டவுன் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் பாலகுருசாமி. பாத்திர வியாபாரியான இவர், கோயில் திருவிழாவில் வியாபாரம் செய்வதற்காக கடந்த வாரம் சங்கரன்கோவில் அருகே உள்ள தென்மலைக்குச் சென்றுள்ளார். அப்போது தனது மனைவி ரேவதி மற்றும் குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து சென்றுள்ள அருகில் உள்ள தனது தங்கை வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 33 பவுன் நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாலகுருசாமி, இதுகுறித்து நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, போலீசாரின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பீரோவின் பூட்டு உடைக்கப்படாமல், அதன் சாவியைப் பயன்படுத்தித் திறந்திருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, வீட்டில் சாவி வைக்கப்பட்டிருந்த இடம் குறித்து தெரிந்த நபர்கள் யாரேனும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது பாலகுருசாமியின் மனைவி ரேவதியின் செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தபோது, சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நவநீதகிருஷ்ணனுடன் அவர் அடிக்கடி பேசியது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். எனவே நவநீதகிருஷ்ணனைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ரேவதி தனது குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்பி வந்த போது, நவநீதகிருஷ்ணனுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது திருமணத்துக்கு மீறிய உறவாக மாறியதாகவும் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த நான்கு மாதங்களாகக் கணவருக்குத் தெரியாமல் வீட்டிலிருந்த நகைகளை ரேவதி சிறுகச் சிறுக எடுத்துக் கொடுத்து வந்ததாகவும், அவை ஏற்கெனவே அடகு வைக்கப்பட்டு செலவழிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், வீட்டில் உள்ள நகைகளை அடமானம் வைத்து விட்டு புதிய சொத்து வாங்கத் திட்டமிட்டுள்ளதாக பாலகுருசாமி தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனால், பீரோவில் நகைகள் இல்லாதது கணவருக்குத் தெரிந்துவிடும் என அஞ்சிய ரேவதி, நவநீதகிருஷ்ணனுடன் சேர்ந்து திருட்டு நடந்தது போல் நாடகமாடத் திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடும்பத்தினர் வெளியூருக்குச் சென்றிருந்த நேரத்தில், நவநீதகிருஷ்ணன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றதாகக் கூறப்படுகிறது. பீரோவில் நகைகள் இல்லாத நிலையிலும், திருட்டு நடந்தது போல காட்டுவதற்காக ரேவதி குறிப்பிட்ட இடத்தில் இருந்த சாவியை எடுத்து பீரோவைத் திறந்து வைத்ததாகவும், பின்னர் மிளகாய்ப் பொடியைத் தூவி சம்பவத்தைத் திசைதிருப்ப முயன்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் நவநீதகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் ரேவதியின் பங்கு குறித்தும், நகைகள் எவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டு செலவழிக்கப்பட்டன என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் 33 பவுன் நகைகள் திருடுபோனதாக அளிக்கப்பட்ட புகாரின் பின்னணியில், கணவருக்குத் தெரியாமல் நகைகள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் திருட்டு நாடகம் அரங்கேற்றப்பட்டதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.