Kannanallur Panchayat President Murder 
க்ரைம்

“கல்லால் அடித்து கொல்லப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்” - குடிநீர் பிரச்சனையில் திடீர் தகராறு. முறையிடச் சென்றவர் செய்த செயல்!

செங்கல்லை எடுத்து, அதைக் கொண்டு மகாராஜனின் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே குடிநீர் விநியோகம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஊராட்சி மன்றத் தலைவர் கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான மகாராஜன், இவர் கடந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், கண்ணநல்லூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த இசக்கி பாண்டியன் என்பவர், ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜனை நேரில் சந்தித்து குடிநீர் பிரச்சினை குறித்து முறையிட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தகராறாக மாறிய நிலையில் இதில் ஆத்திரமடைந்த இசக்கி பாண்டியன், அருகில் சங்கர் என்பவரது வீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் கிடந்த செங்கல்லை எடுத்து, அதைக் கொண்டு மகாராஜனின் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

செங்கல் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த மகாராஜன், ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மகாராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து அப்பகுதிக்கு மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எனவே தகவலறிந்த வள்ளியூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவான இசக்கி பாண்டியனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து கொலைக்கு குடிநீர் பிரச்சனை தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் முன்பகை உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர் விநியோகம் தொடர்பான பிரச்சினையில் ஊராட்சி மன்றத் தலைவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்ணநல்லூர் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்