muralidharan and ravi  
க்ரைம்

“தனியாக அறைக்கு அழைத்து சிறுமிகளிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியர்” - அரசு பள்ளியில் தொடர்ந்து மாணவிகளுக்கு நடந்த கொடுமைகள்!

இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த முரளிதரணும் மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்...

Mahalakshmi Somasundaram

திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ரவி தலைமை ஆசிரியராகவும், திருவண்ணாமலை தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் இடைநிலை ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், பள்ளியில் அடிக்கடி வகுப்பறைக்கு சென்று தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

மேலும் சில நேரங்களில் மாணவிகளை தலைமை ஆசிரியர் அவரது அறைக்கு அழைத்து அத்துமீறியதாகவும் தெரிகிறது. அதே போல இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த முரளிதரணும் மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். தொடர்ந்து இருவரும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி வந்த நிலையில் அச்சமடைந்த மாணவர்கள் இது குறித்து அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். 

மாணவிகள் தெரிவித்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்  உடனடியாக இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து மாணவிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தலைமை ஆசிரியர் ரவி மற்றும் இடைநிலை ஆசிரியர் முரளிதரன் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டது. 

எனவே இருவர் மீதும்  குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு சட்டம் (போக்சோ) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவர்களுக்கு கல்வி கற்பித்து பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டிய ஆசிரியர்களே, தங்களது பொறுப்பை மீறி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.