“அரசு பேருந்தில் பள்ளி சிறுமியிடம் அத்துமீறிய நடத்துநர்” - 20 ரூபாய் கொடுத்து மிரட்டல்.. தாயின் செயலால் வெளிவந்த உண்மை!

ராஜலிங்கத்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த போலீசார், சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில்..
kanyakumari pocso accust rajalingam
kanyakumari pocso accust rajalingam
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ஒரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி வீட்டிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், தினமும் சிறுமி அதிகாலை அரசு பேருந்தில் தனியாக பள்ளிக்குச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது. சம்பவத்தன்று அதிகாலை வழக்கம்போல், சிறுமியை அவரது தாய் அரசு பேருந்தில் ஏற்றி பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார். அப்போது பேருந்தில் மாணவி மட்டுமே பயணித்த நிலையில், அடுத்த நிறுத்தம் வருவதற்குள் பேருந்து நடத்துனரான 51 வயதுடைய ராஜலிங்கம், மாணவியின் அருகே சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட முயன்றபோது, "யாரிடமும் சொல்லக்கூடாது" என்று மிரட்டிய நடத்துனர், அவரது கையில் ரூ.20 கொடுத்து, "மிட்டாய் வாங்கி சாப்பிடு... நடந்ததை வெளியே சொல்லாதே" என மிரட்டியுள்ளார். அச்சத்துடன் பள்ளிக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பிய சிறுமி, இரவு தனது தாயிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாய் மறுநாள் 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படை போலீசாரை தொடர்புகொண்டு புகார் அளித்தார்.

புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படை போலீசார், பணி முடித்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த நாகர்கோவில் வல்லன்குமாரவிளை பகுதியைச் சேர்ந்த பேருந்து நடத்துனர் ராஜலிங்கத்தை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். மாணவி மற்றும் நடத்துனரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டதில், சிறுமி கூறிய குற்றச்சாட்டு உறுதியானதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, ராஜலிங்கத்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த போலீசார், சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ராஜலிங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளிக்குச் செல்லும் வழியிலேயே அரசு பேருந்தில் மாணவிக்கு பாலியல் அத்துமீறல் நடந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com