க்ரைம்

“பொங்கல் போட்டியில் ஏற்பட்ட தகராறு” - மாறி மாறி அடித்து கொண்ட இரு தரப்பினர்… அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்ட விவசாயி!

சிலர் மட்டும் கார்த்திக்கை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்...

Mahalakshmi Somasundaram

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தாத்தையங்கார் பேட்டை தேவனூர் புதூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த மீனா என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கார்த்திக் கூலி தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில் பொங்கல் விழாவையொட்டி தேவனூர்புதூர் பகுதியில் ஊர் மக்கள் சேர்ந்து வழுக்கு மரம் ஏறும் போட்டியை ஒருங்கிணைத்து இருக்கின்றனர்.

இந்த போட்டி நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நிலையில் இந்தப் போட்டியில் கார்த்திக் தரப்புக்கும், மற்றொரு தரப்பிற்கும் இடையே யார் வெற்றி பெற போகிறார் என இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். மேலும் குறிப்பிட்ட சிலர் மட்டும் கார்த்திக்கை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சக்திவேல், தினேஷ் ஆகிய இருவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை கைது செய்யக் கோரி நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள சவக்கிடங்கு அருகே கார்த்திக்கின் மனைவி மீனா உள்ளிட்ட உறவினர்கள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்து விட்டோம். என போலீசார் உறுதியளித்து கூறியதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தாத்தையங்கார் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.