தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆலடியூர் பகுதியை சேர்ந்தவர் 78 வயதுடைய தங்கராஜ். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாய்க்கு சென்ற நிலையில் அங்கு நெல்லை சரவணா ஸ்டோர் என்ற பல்பொருள் அங்காடி நடத்தி வந்தார். எனேவே தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த இளைஞர்கள் துபாய்க்கு சென்று தங்கராஜ் கடையில் வேலை பார்த்து வருகின்றனர். அது போல கடந்த சில வருடங்களுக்கு முன்பு அன்பு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தூத்துக்குடியில் இருந்து துபாய்க்கு சென்று வேலை பார்த்து வந்திருக்கிறார்.
துபாயில் வேலை பார்த்து வந்த அன்புவிற்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டு கொரோனா காலத்தில் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது கொரோனா காலம் என்பதால் அன்புவின் உடலை ஊருக்கு அனுப்ப முடியாததால் அங்கேயே அடக்கம் செய்திருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அன்புவின் தந்தை மூக்காண்டி கடையின் உரிமையாளர் தங்கராஜிடம் “என்ன நடந்திருந்தாலும் என் கிட்ட சொல்லி இருக்கனும் என்ன பண்ணலாம்னு என் கிட்ட கேட்டு இருக்கனும்” என அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
இதன் காரணமாக மூக்காண்டிக்கு அவரது மகனின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்தனது மகனின் மரணத்திற்கு தங்கராஜ் தான் கரணம் என நினைத்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் துபையில் இருந்த தங்கராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக சொந்த ஊரான ஏரல் பகுதிக்கு வந்த நிலையில் நேற்று இரவு ஆலடியூர் மெயின் ரோட்டில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏரல் போலீசார் தங்கராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் முதற்கட்ட விசாரணையில் அன்புவின் தந்தை மூக்காண்டி அவரது நண்பருடன் சேர்ந்து தங்கராஜை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே தப்பி ஓடிய மூக்காண்டி மற்றும் அவருடன் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபரையும் ஏரல் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.