க்ரைம்

“அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட டெலிவரி ஊழியர்” - வேளச்சேரியில் நடந்த கொடூர தாக்குதல்… ரத்தம் தெறிக்க வெளியான வீடியோ!

அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் தான் இந்த தாக்குதலை அரங்கேற்றியதாக கூறியுள்ளனர்....

Mahalakshmi Somasundaram

சென்னை மாவட்டம், வேளச்சேரி லட்சுமி நகரைச் சேர்ந்தவர் 23 வயதுடைய பார்த்திபன். இவர் பிரபல ஆன்லைன் காய்கறி விற்பனை நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல டெலிவரிகளை முடித்துவிட்டு நேற்று இரவு வேளச்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில் அப்பகுதிக்கு மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென பார்த்திபனை வழிமறித்து அவர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் பொதுமக்கள் கண்முன்னே உச்சந்தலை, நெற்றி, இரண்டு கை மணிக்கட்டுகள் மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக வெட்டினர்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் கையில் கிடைத்த கட்டை மற்றும் கற்களால் அடித்ததில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பார்த்திபனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் அடிப்படையில் வேளச்சேரி போலீசார் அதே பகுதியை சேர்ந்த நந்தா, சுந்தர், விஷ்ணு ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் கடந்த தீபாவளி அன்று பார்த்திபன், வேளச்சேரியை சேர்ந்த நந்தா, சுந்தர், விஷ்ணு உட்பட பலரை தாக்கியதாகவும் அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் தான் இந்த தாக்குதலை அரங்கேற்றியதாக கூறியுள்ளனர். இந்த கொலைவெறி தாக்குதலில் 6 பேர் ஈடுபட்ட நிலையில் மூன்று பேரை கைதான நிலையில் தலைமறைவாக உள்ள ருத்ரன், வினோத் குமார் உள்ளிட்ட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் கொலை வெறி தாக்குதலுக்கான உண்மை காரணம் இதுதானா அல்லது வேறு ஏதேனும் கரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் டெலிவரி ஊழியர் வேளச்சேரியில் வைத்து அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் மற்றும் இது குறித்து வெளியான வீடியோக்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.