வேலூர் மாவட்டம் அடுத்த சதுப்பேரி பகுதியை சேர்ந்தவர் 34 வயதுடைய பிரேம்குமார் இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் 54 வயதுடைய கோடீஸ்வரன் இவர் திருமணியில் உள்ள அரசு பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மகனான 24 வயதுடைய சக்தி வேலூரில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று மாலை கோடீஸ்வரனும், அவரது மகன் சக்தியும் கஸ்பா, ஆர்.என்.பாளையம் பஜாருக்கு பைக்கில் வந்தனர். அப்போது சாலையோரம் உள்ள லோடு ஆட்டோவில் தக்காளி வாங்குவதற்கு அவர்களது பைக்கை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்த கட்டிட மேஸ்திரி பிரேம் குமார் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பைக்கை எடுக்குமாறு தந்தை மற்றும் மகனிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இதனைக் கண்டு கொள்ளாமல் தந்தையும், மகனும் தக்காளி வாங்கிக் கொண்டு இருந்தனர். இதனால் கோபமடைந்த பிரேம்குமார் தொடர்ந்து ஹாரன் அடித்திருக்கிறார். இதனால் எரிச்சலடைந்த தந்தையும்,மகனும் சேர்ந்து பிரேம்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் சண்டையை தடுத்து நிறுத்தி அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று காலை பிரேம்குமார் சதுப்பேரி பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கோடீஸ்வரன் பிரேம்குமாரை பார்த்ததும் அவரது மகன் சக்தியை வரவழைத்து அவரை கொலை செய்வதற்காக கத்தியுடன் ஆர்.என் பாளையம் பஜார் வரை சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிரேம்குமார் வயிற்றில் சரமாரியாக குத்தினர். இதில் படுகாயம் அடைந்த பிரேம்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரேம்குமார் இறந்ததை உறுதி செய்த தந்தையும், மகனும் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரேம்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய தந்தையும் மகனையும் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கட்டிடம் மேஸ்திரி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.