கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில், விவசாயி ஒருவர் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர், கத்தியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவருக்கு அதே பகுதியில் நிலம் உள்ளது. இவரது நிலத்திற்கு அருகே அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கும் நிலம் உள்ளது.
இருவரின் நிலமும் அடுத்தடுத்து உள்ள நிலையில் நில அளவு குறித்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் விவசாயம் செய்து வந்த நிலையில் தினமும் நிலத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலை வழக்கம்போல் கதிர்வேலும் பொன்னுசாமியும் தங்களது நிலங்களுக்குச் சென்றுள்ளனர். அப்போது, விவசாயம் செய்து கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பொன்னுசாமி விவசாயத்திற்கு பயன்படுத்த தான் வைத்திருந்த கத்தியால் கதிர்வேலின் தலையில் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கதிர்வேல் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, பொன்னுசாமி ரத்தம் சொட்டும் கத்தியுடன் மங்கலம்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்ததாக சொல்லப்படுகிறது. கையில் கத்தியுடன் வந்த பொன்னுசாமியை பார்த்து அதிர்ச்சிடைந்த காவல்துறையினர் நடந்த சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மங்கலம்பேட்டை காவல் துறையினர், கதிர்வேலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலத் தகராறு காரணமாக விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரியவடவாடி கிராம மக்களிடையே சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.