கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள திம்மாபுரம் ஊராட்சி நேரு புரம் கிராமத்தை சேர்ந்தவர் 47 வயதான ரங்கசாமி. இவர் கூலி வேலை செய்து வரும் நிலையில் இவரது மனைவி கவிதா (44) மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
வைத்தீஸ்வரியான பெரிய மகளுக்கு திருமணமாகி அவரது மாமியார் வீட்டில் வசித்து வருகிறார். மற்றொரு மகளான சாதிகா தர்மபுரியில் உள்ள அரசு கல்லூரியிலும் மகன் சூர்யா பள்ளியிலும் படித்து வரும் நிலையில் தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளனர். ரங்கசாமிக்கு தர்மபுரி பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இது கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு கவிதாவிற்கு தெரிய வந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே இது குறித்து அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரங்கசாமி சரிவர வீட்டிற்கு வராமலும் வீட்டிற்கு தேவையானதை செய்யாமலும் இருந்து வந்துள்ளார். இதனால் கவிதா ரங்கசாமியின் மீது கடும் கோபத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கவிதா கடந்த (ஜூன் 10) தேதி இரவு 7 மணிக்கு கடைக்கு சென்று வருவதாக சாதிகா மற்றும் சூர்யாவிடம் சொல்லிவிட்டு வெளியில் சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் கவிதா வீட்டிற்கு வராததால் சூர்யா மற்றும் சாதிகா வீட்டின் கதவை தாழிட்டு தூங்க சென்றுள்ளனர். திடீரென இரவு 11 மணியளவில் வீட்டின் மடியில் ரங்கசாமி அலறும் சத்தம் கேட்டுள்ளது.
இதை கேட்டு எழுந்த சூர்யாவும் சாதிகாவும் மாடிக்கு சென்றுள்ளனர். அப்போது தாய் கவிதா பதற்றத்துடன் மாடி படியிலிருந்து இறங்கி வந்துள்ளார். மாடியில் ரங்கசாமி உடல் முழுவதும் தீ பற்றி எரிந்து கொண்டு இருந்துள்ளார். இதனை கவனித்த சூர்யாவும் சாதிகாவும் தண்ணீர் ஊற்றியும் சாக்கு பைகளை போட்டும் தீயை அணைத்துள்ளனர். பின்னர் சிகிச்சைக்காக ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரங்கசாமி உயிரிழந்த நிலையில் தப்பி சென்ற ரங்கசாமியின் மனைவி கவிதாவை போலீசார் தேடி வருகின்றனர்.மனைவியே கணவனை தீ வைத்து கொலை செய்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.