lakshmi and kulanthaivel  
க்ரைம்

“வீட்டில் தனியாக இருந்த பெண் இரவோடு இரவாக வெட்டி கொலை” - அதிகாலையில் விவசாய நிலத்தில் கிடந்த சடலம்.. கன்னத்தில் அறைந்ததால் வெறிச்செயல்!

அவரது வீட்டிற்கு சென்ற குழந்தைவேல், தன்னை அறைந்த ஆத்திரத்தில் லட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்...

Mahalakshmi Somasundaram

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பூக்காரன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதுடைய லட்சுமி. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் மகள் இந்துவுடன் வசித்து வந்தார். பின்னர் இந்துவுக்கு திருமணமாகி அவரது கணவருடன் வாழ்ந்து வரும் காரணத்தால் லட்சுமி வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லட்சுமியின் வீட்டிற்கு அவரது மகள் இந்து குழந்தைகளுடன் வந்து தங்கி இருந்திருக்கிறார். எனவே நேற்று மாலை இந்துவின் கணவர் ரமேஷ் மாமியார் லட்சுமியின் வீட்டிற்கு சென்று இந்து மற்றும் தனது குழந்தைகளை மீண்டும் தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார்.

அப்போது ரமேஷ் சென்ற இருசக்கர வாகனத்தை, அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய குழந்தைவேல் எதிரே வந்து இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற லட்சுமி வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் குழந்தைவேலுவை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த குழந்தைவேல் அங்கிருந்து உடனடியாக சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து லட்சுமி அவரது வீட்டிற்கு சென்று வீட்டில் தனியாக உறங்கியிருக்கிறார். இந்நிலையில் இரவு 10 மணி அளவில் மீண்டும் அவரது வீட்டிற்கு சென்ற குழந்தைவேல், தன்னை அறைந்த ஆத்திரத்தில் லட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த குழந்தைவேல் லட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அவரது உடலை வீட்டிலிருந்து இழுத்துச் சென்று, எதிரே உள்ள விவசாய நிலத்தில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் நேரில் சென்று ஆய்வு செய்ததுடன், லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்த குழந்தைவேல் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ரமேஷின் வாகனத்தை மோதியதற்காக லட்சுமி தன்னை தாக்கியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார் .மேலும் கொலைக்குப் பிறகு வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு, லட்சுமி வீட்டிலிருந்த வெள்ளி கொலுசு, தங்க நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் சென்றதுடன், தப்பிச் செல்வதற்கு முன்பு தானே 100 எண்ணிற்கு அழைத்து தகவல் கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பென்னாகரம் காவல் துறையினர் குழந்தைவேலை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.