அரியலூர் மாவட்டம், ஓட்டக்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாண்டிலட்சுமி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் ஆறு வயதில் லோகேஷ் என்ற மகனும், இரண்டு வயதில் கமலேஷ் என்ற மகனும் உள்ளனர். ரகுபதி திருமணத்திற்கு முன்பு தனது சொந்த ஊரில் கூலித்தொழில் செய்து வந்த நிலையில் பின்னர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருப்பூருக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
ரகுபதி அங்குள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார், அவரது மனைவி பாண்டிலட்சுமி வீட்டிற்கு அருகில் உள்ள அழகு நிலையத்தில் பியூட்டிஷியன் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் ரகுபதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓட்டக்கோவில் கிராமத்திற்கு வந்த நிலையில் பாக்கியலட்சுமி மட்டும் திருப்பூரில் குழந்தைகளுடன் தங்கி வேலை செய்துள்ளார். பின்னர் அவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழந்தைகளை அழைத்து கொண்டு சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.
இந்நிலையில் பாண்டியலட்சுமிக்கு மற்றொருவருடன் தகாத உறவு இருப்பதாக கூறி கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான பாண்டிலட்சுமி ஓட்டக்கோவிலுக்கு வந்துள்ளார். இதையடுத்து தனது 2 மகன்களுடன் அம்பலவர்கட்டளை கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் பெரிய மகனை கரையில் உட்கார வைத்துவிட்டு, தனது இளைய மகனை இடுப்பில் கட்டிக்கொண்டு ஏரியில் குதித்துள்ளார். இதனை பார்த்த கரையில் அமர்ந்திருந்த மூத்த மகன் தனது தாயார் வராததை கண்டு அழுவதை பார்த்த கிராம மக்கள் அவரிடம் விசாரித்த போது நடந்ததை கூறியுள்ளார்.
இதையடுத்து கிராம மக்கள் போலீசாருக்கு தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏரியிலிருந்து பாண்டிலட்சுமி மற்றும் அவரது இளைய மகன் ஆகிய இருவரையும் சடலமாக மீட்டனர். மேலும் மூத்த மகனிடம் இருந்த பாண்டிலட்சுமியின் செல்போனை வாங்கி பார்த்த போது, அதில் “எனது கடைசி புகைப்படம் என்றும், என் சாவுக்கு இந்த ஆள் தான் காரணம்” என்று ஒருவரின் புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் பதிவு செய்து இருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் உண்மையிலேயே அந்த புகைப்படத்தில் இருப்பவருக்கும் பாண்டிலட்சுமிக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததா? வேறு ஏதேனும் அவர் பாண்டிலட்சுமியை மிரட்டினாரா? அல்லது கடன் பிரச்சனையா என தற்கொலைக்கான காரணத்தை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இரண்டு வயது மகனை இடுப்பில் கட்டிக்கொண்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.