பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் மனிதநேய சேவையில் அளித்த அபூர்வமான பங்களிப்புகளுக்காக, “பேட்மேன்” என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் “அருணாச்சல முருகானந்தம்”. இவர் கோவை ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஓர் கண்டுபிடிப்பாளர். மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற, தூய்மை குறைவான செயல்முறைகளை மாற்ற நினைத்து, மலிவான தீர்வைக் காண வேண்டியதன் தேவையை வெளிப்படுத்தியவர்.
தனது சிறு வயதிலேயே பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கிடைக்கும் வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த அருணாச்சலம் திருமணத்திற்கு பிறகு தனது மனைவி அணையாடை (நாப்கின் பேட்) வாங்க வசதி இல்லாமல் தூய்மையற்ற துணிகளை பயன்படுத்துவது பார்த்து கவலை கொண்டுள்ளார். எனவே இது போல பல பெண்கள் வசதியின்மை காரணமாக தங்களின் ஆரோக்கியத்தை கேள்விக்குறி ஆக்குவதை எண்ணி விலை குறைவான மற்றும் ஆரோக்கியமான அணையாடைகளை உருவாக்க எண்ணியுள்ளார்.
பல அணையாடைகள் நிறுவனங்கள் தயாரித்த அணையாடைகளை பரிசோதித்து ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மட்டும் தனது அணையாடையில் “பைன் மரத்தின் மரப்பட்டையை” பயன்படுத்தி இருப்பதை கண்டறிந்துள்ளார். இவ்வாறான அணையாடைகளை தயாரிக்க பயன்படுத்தும் இயந்திரத்தின் விலை சுமார் நான்கு கோடி என்பதை அறிந்த அதே போன்ற ஒரு இயந்திரத்தை குறைவான விலையில் தயாரிக்க எண்ணினார். பிறகு தனது அசாதாரணமான முயற்சியாலும் விட முயற்சியாலும் எளிய இயந்திரத்தை கண்டறிந்தார்.
இந்த இயந்திரத்தை வாங்க பல்வேறு நிறுவனங்கள் முன்வந்த போதிலும் மக்களின் நலனுக்காக இந்த இயந்திரத்தை, சுய உதவி குழு பெண்களுக்கும், எளிய நிறுவனங்களுக்கும் லாபமின்றி விற்பனை செய்துள்ளார். மேலும் கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு அணையாடைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு அணையாடைகளை இலவசமாக வழங்கினார்.
மாநிலங்களின் புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதாரத்தை மாற்றியமைத்த அருணாச்சலம் , உலகளவில் பெண்களின் நலனுக்காக போராடும் இயக்கங்களுக்கு தூண்டுதல் அளித்தார். எனவே உலகிலேயே மிகவும் தாக்கம் செலுத்தும் 100 பேரில் ஒருவராக, Time பத்திரிக்கை இவரை தேர்ந்தெடுத்தது அதுமட்டுமல்லாமல் இவரது சேவை மற்றும் கன்டுபிடிப்பை பாராட்டி இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்திருந்தது.
இவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு, தேசிய விருது பெற்ற ஹிந்தி திரைப்படமான “Padman” உருவானது. அதில் அருணாச்சலம் கதாபாத்திரத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடித்தார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் மாதவிடாய் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மேலும், ஆஸ்கார் விருது வென்ற “Period. End of Sentence.” ஆவணப்படம் அருணாசலத்தின் கண்டுபிடிப்பு மற்றும் அதன் தாக்கத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் அண்மையில் பத்மஸ்ரீ அருணாச்சலம் முருகானந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் மதிப்புக்குரிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. தனது சமூக உணர்வை கைவிடாத அருணாச்சலம் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்களை வலுப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே அருணாச்சல முருகானந்தத்தின் வாழ்க்கை ஹாலிவுட் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது, விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.