AI generated image 
மாவட்டம்

“முன்னாள் காதலி எத்தனை பேரை காதலித்துள்ளார்?” - RTI-யில் 97 மனுக்கள்… டென்ஷனான ஆணையம்!

1,886 கேள்விகளை எழுப்பி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அதிகாரிக்கு

Muthu Lakshmi

தனது முன்னாள் காதலி, எத்தனை பேரை காதலித்துள்ளார்? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விழுப்புரத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பி 97 மனுக்கள் தாக்கல்  செய்துள்ளார். இந்த செயலுக்கு மாநில தகவல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

2005-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்தியக் குடிமக்கள் அரசுத் துறைகள் மற்றும் பொது அமைப்புகளிடம் இருந்து தகவல்களை பெற்றுக்கொள்ள உதவும் முக்கிய சட்டமாகும். இச்சட்டத்தின் முக்கிய நோக்கம் அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை ஆகியவற்றை அதிகரிப்பதும் ஆகும். தற்போது இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்திய இளைஞருக்கு மாநில தகவல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், கடந்த 2021-2024 ஆண்டுகளில் அங்குள்ள கல்லூரியில் படித்தபோது, உடன் படித்த பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. சந்தோஷின் நடத்தை காரணமாக அந்தப் பெண் காதலை முறித்துகொண்டு அவரிடமிருந்து விலகிச் சென்றுள்ளார். இருப்பினும், செல்போன், லெட்டர் மூலம் சந்தோஷ் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இவரின் தொந்தரவு ஒரு கட்டத்திற்கு மேல்  அந்தப் பெண்ணை தற்கொலை முயற்சிக்கு தூண்டியுள்ளது.. 

இந்நிலையில், தன்னுடைய முன்னாள் காதலி தற்போது யாரை காதலிக்கிறார்? இதற்கு முன் எத்தனை பேரை காதலித்துள்ளார்? அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா? அவர் உயிரோடு இருக்கிறாரா? போன்ற 1,886 கேள்விகளை எழுப்பி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அதிகாரிக்கு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் 97 விண்ணப்பங்களை அனுப்பியுள்ளார். 

இந்த தகவல்களை வழங்கவில்லை என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக சந்தோஷ், மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடும் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த ஆணையர் வி.பி.ஆர்.இளம்பரிதி, தகவல் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும் விதமாகவும், அரசு ஊழியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமையை ஏற்படுத்தும் வகையிலும், எந்தவொரு பொதுநலனும் இல்லாமல் சந்தோஷ் செயல்பட்டுள்ளதாக ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

மேலும், சந்தோஷ் கோரிய எந்த தகவல்களையும் வழங்க முடியாது எனவும், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்ய அவருக்கு ஓராண்டு தடை விதித்தும் உத்தரவிட்ட மாநில தகவல் ஆணையம், சந்தோஷுக்கு மனநல ஆலோசனை வழங்க மாவட்ட சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்