கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரத்தைச் சேர்ந்த குடும்பத்தில், தந்தையைத் தொடர்ந்து தாயையும் இழந்த 2 பெண் குழந்தைகள், வயதான பாட்டியின் பராமரிப்பில் ஆதரவின்றி தவித்து வருகின்றனர். உயர்கல்வி படித்து வாழ்க்கையில் முன்னேறவும், சொந்த வீடு கிடைக்கவும் தமிழக முதல்வர் விஜய் உதவ வேண்டும் என அவர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அஞ்சுகிராமம் அருகே உள்ள தனியார் குடியிருப்பில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சத்யா, படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
இந்த தம்பதிக்கு அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் பிரியதர்ஷினி மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் ஸ்வேதா ஸ்ரீ என இரண்டு மகள்கள் உள்ளனர். சரவணனின் வயதான தாயும் அவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சரவணனுக்கு திடீரென நுரையீரலில் நிமோனியா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், சிகிச்சை பலனின்றி எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.
சரவணனின் மறைவுக்குப் பிறகு குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து அவரது மனைவி சத்யா, தனது வருமானத்தின் மூலம் குடும்பத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், சத்யாவுக்கும் திடீரென மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த (செப் 9) ஆம் தேதி சிகிச்சை பலனின்றி சத்யாவும் உயிரிழந்தார். அடுத்தடுத்து பெற்றோரை இழந்த பிரியதர்ஷினி மற்றும் ஸ்வேதா ஸ்ரீ ஆகிய இரு சிறுமிகளும் தற்போது அவர்களது வயதான பாட்டியின் பராமரிப்பில் உள்ளனர்.
அவர்கள் வசித்து வரும் வீடு வாடகை வீடு என்பதால் வாடகை செலுத்த முடியாமல் ஏற்கனவே வீட்டுக்கு செலுத்திய அட்வான்ஸ் தொகையை, வீட்டின் உரிமையாளர் மாத வாடகையாகக் கழித்து வருவதாக கூறப்படுகிறது. பாட்டிக்கு கிடைக்கும் அரசின் ரூ.1,000 உதவித் தொகையை குடும்பத்தின் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். சொந்த வீடு இல்லாத நிலையில், மாத வாடகையைக் கூட செலுத்த முடியாமல் இரு குழந்தைகளும் பாட்டியுடன் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் சிரமப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரை இழந்த நிலையிலும், இரு குழந்தைகளும் வீட்டில் உள்ள வேலைகளை கவனித்து கொண்டே தங்களது படிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். பள்ளிப் படிப்பை முடித்து, தொடர்ந்து உயர்கல்வி படிக்கவும், பாதுகாப்பாக சொந்த வீட்டில் வசிக்கவும் உதவி தேவைப்படும் நிலையில், சிறுமிகள் “விஜய் மாமா நீங்க தான் எங்களை படிக்க வைக்கணும்.. எங்களுக்கு ஒரு பாதுகாப்பான இடம் கொடுக்கணும்” என தமிழக முதல்வர் விஜய்யிடம் இரு மாணவிகளும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்