Ranipet Vinoth Singapore Death 
மாவட்டம்

“கணவரின் உடலை பார்த்து கதறிய மனைவி” - வேலைக்கு சென்றவருக்கு காத்திருந்த எமன்.. சிங்கப்பூரில் பறிபோன உயிர்கள்!

இருவரின் உடல்களையும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் மேற்கொண்டது...

Mahalakshmi Somasundaram

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் உள்ள துறைமுகத்தில் பணியின்போது கண்டெய்னருடன் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சிக்குட்பட்ட நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மூத்த மகன் 35 வயதுடைய வினோத். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் பட்டப்படிப்பு முடித்த இவர், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிங்கப்பூரில் உள்ள ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த (செப் 22) -ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள ‘Tuas Port’ துறைமுகத்தில் வினோத் உள்ளிட்ட இரண்டு தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக கண்டெய்னருடன் இருவரும் கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த துரை என்பவர் சம்பவ இடத்திலேயே சடலமாக மீட்கப்பட்டார். மற்றொருவரான ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Ranipet Vinoth Singapore Death

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வினோத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே உயிரிழந்த இருவரின் உடல்களையும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் மேற்கொண்டது.

அதன்படி, வினோத்தின் உடல் நேற்று (செப் 25) ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, அவரது சொந்த ஊரான நரசிங்கபுரத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. கணவரின் உயிரிழப்பு குறித்து தகவல் அறிந்த வினோத்தின் மனைவி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. வெளிநாட்டில் பணியாற்றச் சென்ற இளைஞர், துறைமுகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்டெய்னருடன் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்