திருப்பத்தூர் மாவட்டம், புதூர் நாடு என்ற மலை பகுதியில் உள்ள சின்னவட்டானூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் 19 வயது மகள் காளீஸ்வரி. இவர் திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். காளீஸ்வரிக்கு அதே கல்லூரியில் பயிலும் சக மாணவனுடன் நட்பு ஏற்பட்டுள்ளது இந்த நட்பானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களின் காதலை பற்றி காளீஸ்வரியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் கோபமடைந்த காளீஸ்வரியின் பெற்றோர்கள் மாணவியை கண்டித்து கல்லூரி செல்ல கூடாது என்று கூறியுள்ளனர், இதனை காளீஸ்வரி ஏற்க மறுத்து கல்லூரிக்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளார் இருப்பினும் அவரது பெற்றோர்கள் காளீஸ்வரியை கல்லூரியை விட்டு நிறுத்தி உள்ளனர். இதனால் மனம் உடைந்த நிலையில் காளீஸ்வரி செல்போனில் மூழ்கி உள்ளார். எப்போது பார்த்தாலும் செல்போனை வைத்துக் கொண்டு அதில் கவனம் செலுத்தியதால் மாணவியின் தாய் அதனை கண்டித்து உள்ளார்.
இருப்பினும் காளீஸ்வரி சக மாணவர்களிடம் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது தாய் “எப்போது பார்த்தாலும் செல்போன் செல்போன் என்று அதை வைத்துக்கொண்டு என்ன செய்கிறாய்” என்று கேட்டு அதை பிடுங்கி வீசி எறிந்துள்ளார். ஏற்கனவே காதல் வீட்டிற்கு தெரிந்து கல்லூரி படிப்பு வீணாகி விட்டது என மன உளைச்சலில் இருந்த மாணவி தாயின் செயலால் மேலும் மனமுடைந்த மனைவி நெல் பயிருக்கு அடிக்க வைத்து இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து உள்ளார்.
மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளதை அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக காளீஸ்வரி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இது குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, மன உளைச்சல் இருந்தால் அழைக்க வேண்டிய எண்-1800-599-0019.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.